ஆவாரம்

ஆவாரம்

bookmark

தாவர இயல் பெயர்: Cassia Auriculata

இதன் மறு பெயர்கள்: தலபோடம், ஆகுளி, ஆவீரை, மேகாரி, ஏமபுட்பி, ஆவாரை

வளரும் இடங்கள்: தென்னிந்தியாவில் பயிரிடப் படுகிறது. முக்கியமாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.

பயன் தரும் பகுதிகள்: வேர், இலை, பூ, பட்டை, விதை

பொதுவான தகவல்கள் : ஆவாரை நரம்புகளையும், உடல் தாதுக்களையும் சுருக்கி உதிரம், சீழ் முதலியனவற்றை நிறுத்தும். அத்துடன் உடலுக்கு பலம் அளிக்கும். குளிர்ச்சி தரும். ஆவாரை தமிழகமெங்கும் அனைத்து வகை நிலங்களும் ஏற்றவை. எல்லா இடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள். பழிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி, மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன் படுகிறது. இது ஒரு வருடப் பயிர். வேர் எடுக்காவிட்டால் ஆண்டுக் கணக்கில் உயிருடன் இருக்கும்.

ஆவாரம் பூவின் மருத்துவப் பயன்கள்: -

* ஆவாரம் பூக்களையும், இலையையும் காய வைத்து பொடி செய்து சமமாகக் கலந்து வைத்துக் கொண்டு, தினமும் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தி அடையும். ஈரல் சம்மந்தமான நோய்கள் கூட நிவர்த்தியாகும். நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெறும்.

* ஆரம்பக் கால நீரிழிவு முழுமையாக நிவர்த்தி ஆவதற்கு ஆவாரையின் விதைகள் நன்கு பயன்படுகிறது.

* ஆவாரம் பூ, இலை, பட்டை, காய், பிசின் ஆகிய ஐந்தையும் காய வைத்துப் பொடித்து சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துக்கு ஆவாரை பஞ்சகம் என்று பெயர். இந்தப் பொடியை தினமும் இரண்டு வேளை, இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தியாகும்.

* ஆவாரம் பட்டை கஷாயம் சாப்பிட சருமம் ஒளி பெரும்.

* ஆவாரம் வேரைச் சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து 50 மில்லி அளவு சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

* ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.

* 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

* சர்வ பிரமேக, நீரிழிவு நோய் நிவாரணிகளில் முதல் இடம் பெற்றுள்ள மூலிகை ஆவாரம் பூ.

* ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி நோய்களையும், கண் நோய்களையும், மூல நோய்களையும், புரையோடிய புண்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், வெள்ளை வேட்டை நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. அலர்ஜி அரிப்புகள் ஆகியவற்றையும் நீக்குகிறது.