கறிவேப்பிலை
தாவர இயல் பெயர்: Murraya koenigii
இதன் மறு பெயர்கள்: கருவேப்பிலை,கறியபிலை, கறிவேம்பு
வளரும் இடங்கள்: கறிவேப்பிலையின் தாயகம் இந்தியா தான். இதனது தமிழ்ப் பெயரைத் தழுவி தான் curry leaf என்ற ஆங்கில வார்த்தை மொழியாக்கம் வந்துள்ளது. ஆக, இதன் மூலம் இதன் தாயகம் தமிழகம் அதாவது இந்தியா என்று அறியப்படுகிறது. அதிலும், இந்தியாவில் பரவலாக எல்லா இடங்களிலும் இதன் இலைகளுக்காக பயிரிடப்படுகிறது.
பயன் தரும் பகுதிகள்: இலைகள், வேர்ப்பட்டை, கனிகள் ஆகிய அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.
பொதுவான தகவல்கள் : கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை (curry leaf) என்று அழைக்கப்படும் இது பலமருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும். அதன் தாவரவியல் பெயர் முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்றது. இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணியாகும்.
கறுவேப்பிலையின் தோற்றம் : வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.
கறிவேப்பிலை சொல் விளக்கம்:-
கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.
"கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினர் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
மேலும் கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன.
இலங்கை மற்றும் பிறநாடுகளில் கறிவேப்பிலை ஒரு பார்வை:-
கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை.
இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு அதிகம் காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.
பேச்சு வழக்கில்:-
"கறிவேப்பிலை" எனும் சொல் கறுவேப்பிலை, கறுவப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை எனப் பல்வேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. கறிவேப்பிலை என்றே பேச்சு வழக்கிலும் பயன்படுத்துவோரும் உளர். குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் கேட்கலாம்; இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சு வழக்கில் பயன்படுவதும் உண்டு.
கறிவேப்பிலை இதர மருத்துவப் பயன்கள்:-
* உணவுகளில் கறிவேப்பிலையை சேர்த்தால் கண் பார்வை மேம்படும். அத்துடன் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ இருப்பதால் முடி நன்றாக வளரும். சீக்கிரத்தில் இள நரை ஏற்படாமல் பாதுகாக்கும்.
* காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
* ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய இந்த மூன்றையும் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் எப்பேர்ப்பட்ட அஜீரணமும் பறந்து போய் விடும்.
* வாயுப் பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக வாயுப்பிரச்சினை மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும்.
* ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
* ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி முறிந்து வெளியேறிவிடும். கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்.
* கறிவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
* கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
* கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும்.
* கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.
* வயிற்றுப் புழுக்கள், பெரு நோய், மந்தம், நச்சு ஜுரம், அம்மை புண், சொறி, சிரங்கு போன்ற அனைத்தையும் நீக்க வல்லது கறிவேப்பில்லை பொடி.
* உணவில் கறிவேப்பிலை சேர்ப்பதால் ஜீரணம் சரிவர நடைபெறும். இரத்தத்தில் காணப்படும் கிருமிகள் அழியும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
* கறிவேப்பிலைப் பொடி, நெல்லிப் பொடி, மஞ்சள் பொடி மூன்றையும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கணைச் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தும் அத்துடன் இன்சுலினை சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை வியாதியின் தாக்கம் பக்க விளைவுகள் ஏதும் இன்றி படிப்படியாகக் குறையும்.
* கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்த வாந்தி நீங்கும்.
* கறிவேப்பிலையை அரைத்துப் பூசினால் தோல் நோய்கள் பறந்து போகும்.
* மஞ்சளுடன் கறிவேப்பிலையை அரைத்து தொடர்ந்து ஒரு மாதம் காலையில் உட்கொண்டால் அலர்ஜி சம்மந்தமான நோய்கள் அனைத்தும் பறந்து போகும்.
* கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கிக் குடித்தால் நல்ல பசி ஏற்படும்.
* அசைவ உணவு உட்கொள்வதால் ஏற்படும் மந்தத்திற்கு இஞ்சி, கறிவேப்பிலை அரைத்து கலக்கிய மோர் சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* கறிவேப்பிலையில் போட்டு காய்ச்சிய எண்ணெயை தலைக்கு தடவி வர முடி பளபளக்கும் அத்துடன் கரு நிறத்துடனும் காணப்படும். சீக்கிரத்தில் முதுமை தாக்காது.
* நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை போட்டுப் பொடியாக்கி அதனை சோற்றுடன் போட்டு நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலச்சிக்கல் மலக்கட்டு போன்ற நோய்கள் குணமாகும்.
* கறிவேப்பிலையின் குச்சியைக் கொண்டு பற்களை துலக்கி வர பல் ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் பளிச்சென்று மாறும்.
* கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வைப் போக்குவதற்கு எலுமிச்சை சாற்றுடன் வெல்லம் மற்றும் சிறிது கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து குடித்து வர, காலைச் சோர்வு நீங்கும்.
* கறிவேப்பிலையில் வைட்டமின் "ஏ', வைட்டமின் "பி', வைட்டமின் "பி2', வைட்டமின் "சி', கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. அதனால் உடலுக்கு பல விதங்களில் நன்மையை செய்ய வல்லது.
* கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், பொஸ்பரஸ், கல்சியம் மற்றும் விட்டமின்களான ஏ, ஈ, சி மற்றும் பி போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன. எனவே கறிவேப்பிலையைக் கொண்டு பல பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணலாம்.
* இரத்த சோகை உள்ளவா்கள் சுடுநீரில் அல்லது பாலில் கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
