கார்முகப் படலம் - 751

bookmark

சனகன் பணியாளரை ஏவ அவர்கள் விற்சாலையை
அணுகல்

ஏவலர் வில்லினை அவைக்குக் கொண்டுவரல்
 
751.    

என்றனன். ஏன்று. தன்
   எதிர் நின்றாரை. ‘அக்
குன்று உறழ் வரி சிலை
   கொணர்மின். ஈண்டு’ என.
‘நன்று’ என வணங்கினர்.
   நால்வர் ஓடினர்;
பொன் திணி கார்முகச்
   சாலை புக்கனர்.
 
என்றனன்    - என்று கூறிய சனகன்; ஏன்று - தன் கட்டளையை
ஏற்று; எதிர் நின்றாரை- தனக்கு எதிரே நின்ற ஏவலாட்களை நோக்கி;
குன்று உறழ் வரிசிலை - மலையைப் போன்ற அக்கட்டமைந்த  (சிவ)
வில்லை;  ஈண்டு  கொணர்மின்என  - இங்கே  கொண்டு வாருங்கள்
என்று  ஆணையிட; நால்வர் - அவர்களுள் நான்கு பேர்; நன்று என
வணங்கினர்   -  நல்லது  என்று  கூறி  வணங்கிவிட்டு;  ஓடினர்  -
விரைவாகச் சென்று; பொன்திணி - பொன் இழைத்த; கார்முகச் சாலை
- அந்த வில் வைக்கப்பட்டுள்ள இடம்; புக்கனர் - சென்றார்கள்.

சிவதனுசை  அச் சிறுவர்க்குக் காட்டுமாறு அதனை அங்கே கொண்டு
வரச் சனகன் ஏலாட்களுக்குக் கட்டளையிட்டான்; அதனை மேற்கொண்ட
சிலர் அவ் வில் வைத்திருக்குமிடம்  சென்றார்கள்.  நன்று -  அரசனது
பணியை ஏற்று ஏவலாளர் கூறும் ஒரு மரியாதைச் சொல்.            2