கார்முகப் படலம் - 753

bookmark

சிவதனுசு சனகன் திருமுன் வந்து சேர்தல்

753.    

நெடு நிலமகள் முதுகு ஆற்ற. நின்று உயர்
தட நிமிர் வடவரைதானும் நாண் உற.
‘இடம் இலை உலகு’ என வந்தது. - எங்கணும்
கடல் புரை திரு நகர் இரைத்துக் காணவே.
 
நெடுநில மகள்  -  பெரிய  இப்  பூமிதேவி;  முதுகு  ஆற்ற  -
(நெடுங்காலமாக  அந்த  வில்லைத் தாங்கியதனால் ஏற்பட்ட)  முதுகின்
நோவை  ஆற்றிக்  கொள்ளவும்; நின்று உயர் - நிலைபெற்று ஓங்கிய;
தடம்  நிமிர் வடவரைதானும் - பெரிய மேரு மலையும்; நாண் உற-
(வில்லின்   தோற்றம்  கண்டு)  வெட்கம்  அடையவும்;  கடல்  புரை
திருநகர்  -  கடல்போல்  பரந்துபட்ட  மக்கள்;  உலகு  எங்கணும்-
உலகத்திலே  எங்கும்;  இடம்  இலை  என  - இடம் இல்லை என்று
சொல்லும்படி; வந்தது - (அச்சிவ) வில்லானது (சுமக்கப்பட்டு) வந்தது.

உலகத்தவர்   திரண்டு காணுமாறு அச்சிவ வில் ஆயிரக் கணக்கான
பணியாளரால்  தாங்கப்பட்டு  வந்தது.  நெடுங்காலமாகச்   சிவதனுசைத்
தாங்கியதனால்   நோவுற்ற  பூமிக்கு  இப்போது    இளைப்பாற  இடம்
ஏற்பட்டது. நகர் - ஆகு பெயர்.                               4