குலமுறை கிளத்து படலம் - 734
தசரதன் மகவின்றி வருந்தல்
734.
‘துனி இன்றி உயிர் செல்ல.
சுடர் ஆழிப் படை வெய்யோன்
பனி வென்றபடி என்ன.
பகை வென்று படி காப்போன்.
தனு அன்றித் துணை இல்லான்.
தருமத்தின் கவசத்தான்.
மனு வென்ற நீதியான்.
மகவு இன்றி வருந்துவான்;
துனி இன்றி-துன்பம் இல்லாமல்; உயிர் செல்ல - (உலகத்திலுள்ள)
உயிர்கள் யாவும் வாழும்படி; சுடர் ஆழிப் படை - ஒளிமிக்க
திருமாலின் சக்கரப்படை போன்ற; வெய்யோன் - சூரியன்; பனி
வென்றபடி என்ன - பனியை (எளிதாக ஒழித்து) வெற்றி கொண்ட
தன்மைபோல; பகை வென்று - பகையரசர்களை (எளிதில்) வெற்றி
கொண்டு; படி காப்போன் - உலகத்தைக் காப்பவனும்; தனு அன்றி -
(தன்) கை வில்லை அல்லாமல்; துணை இல்லான் - வேறு துணையாக
(எதையும் யாரையும்) விரும்பாதவனும்; தருமத்தின் கவசத்தான் -
தருமத்தையே கவசமாகக் கொண்டவனும்; மனுவென்ற நீதியான் -
(அரச தர்ம சாத்திரங்களை இயற்றிய) மனுவையே நீதிநெறியில்
வென்றவனும் ஆகிய தசரதன்; மகவு இன்றி வருந்துவான் -
குழந்தைப் பேறு இல்லாமல் மன வருத்தம் உற்றிருந்தான்.
சூரியன் - மன்னனுக்கும். பனி - பகைவர்க்கும். ஒளி -
வில்லுக்கும் உவமையாகும். தனுவன்றித் துணையில்லான் - ஆற்றல்
மிக்க வீரன். 14
