குலமுறை கிளத்து படலம் - 736

bookmark

தசரதன் கலைக்கோட்டுமுனியை வேண்டல்

736.    

“தார் காத்த நறுங் குஞ்சித்
   தனயர்கள். என் தவம் இன்மை.
வார் காத்த வன முலையார்
   மணி வயிறு வாய்த்திலரால்;
நீர் காத்த கடல் புடை சூழ்
   நிலம் காத்தேன்; என்னின். பின்.
பார் காத்தற்கு உரியாரைப்
   பணி. நீ” என்று அடி பணிந்தான்.
 
என்    தவம்    இன்மை  -  (முற்பிறப்பில்)   நான்   நற்றவம்
செய்யாமையால்;  தார்  காத்த  - பூமாலை யணிகின்ற; நறுங்குஞ்சி -
நறுமணமுள்ள  முடியை  உடைய;  தனயர்கள்  -  மைந்தர்கள்; வார்
காத்த  வனமுலையார்  -  கச்சு அணிந்த அழகிய தனங்களையுடைய
என் மனைவியரின்; மணி வயிறு வாய்த்திலர் - அழகிய கருப்பத்தி(ல்)
தோன்றவில்லை -  ஆல் - ஆதலால்; நீர் காத்த கடல் காத்த - நீர்
நிறைந்த   கடலால்  சூழப்பட்ட;   நிலம்  காத்தேன்  -  நிலவுலகம்
முழுவதையும்  ஆட்சி  புரிந்த; என்னின்பின் - எனக்குப் பின்பு; பார்
காத்தற்கு     - இந்த உலகைக்  காப்பதற்கு;   உரியாரை  - உரிய
நல்ல மைந்தரை;  நீ  பணி  என்று  -  (நான் பெறுமாறு) நீ  அருள்
செய்க   என்று    கூறி;   அடி   பணிந்தான்  -  (தசரதன்   அக்
கலைக்கோட்டு முனிவரின்) திருவடிகளை வணங்கினான்.

‘கோசலைதன்     மணிவயிறு வாய்த்தவனே’   (பெருமாள் திரு.8:1).
வயிறு    வாய்த்தல்    -   பண்புடைய    மக்களைக்    கருப்பத்தில்
கொள்ளுதல்.                                              16