சீந்தில் கொடி
தாவர இயல் பெயர்: Tinospora cordifolia
இதன் மறு பெயர்கள்: சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி
வளரும் இடங்கள்: அனைத்து மித மற்றும் உஷ்ண பிரதேசங்களிலும் காணப்படும். குறிப்பாக பெரு மரங்களில் அதிகம் காணப்படும் அதிலும் வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருக்கும்.
பயன் தரும் பகுதிகள்: முழுத் தாவரமும் பயன்படும்
பொதுவான தகவல்கள் : சீந்தில் (Tinospora cordifolia) என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறிப் படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளை கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றி கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.
சித்த மருத்துவத்தில் சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெய்யில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். ஜலதோஷத்திற்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பர். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருந்து தயாரிப்பில் சீந்தில் சர்க்கரை பயன்படுகின்றது.
சீந்தில் கொடியின் இதர மருத்துவப் பயன்கள்:-
* நீரிழிவு, இருமல், மண்ணீரல் கோளாறுகள், கபம், வாந்தி, காமாலை முதலிய பிணிகளுக்கு சீந்திலை கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் பூரணமாக குணம் பெறலாம்.
* ஆர்த்ரைடிஸ் மற்றும் அதனால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து ஆயுர்வேத மருந்தகங்களில் விற்ப்பார்கள். அதனை பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் ஆர்த்ரைடிஸினால் உண்டாகும் பாதிப்புகள் விலகிப் போய்விடும்.
* புண், வீக்கம், கட்டி போன்ற அனைத்திற்கும் சீந்தில் இலையை தணலில் வாட்டிப் போட்டால் சிறப்பான குணம் தெரியும்.
* சீந்தில் கொடி எல்லாவிதமான கஷாயங்களிலும் துணைப் பொருளாக பயன்படக் கூடியதாகும்.
* வேனிற் காலத்தில் அடிக்கடி வரும் மயக்கம், கிறுகிறுப்பு ஆகிய அனைத்திற்கும் சீந்தில் தண்டுச் சாற்றைப் பசும்பாலில் கலந்து உட்கொண்டால் போதும்.
* சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களில் தடவினால், கண் பார்வை தெளிவாக இருக்கும். இது பரவலாக இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.
* இதிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகிய அனைத்தையும் சரிபடுத்துகிறது.
* சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும். மலச்சிக்கலை சரிபடுத்தும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும்.
* சீந்திலின் முற்றிய கொடியை கஷாயம் செய்து சாப்பிட ஜுரம், பலவீனம், அஜீரணம், வாதநோய், கிரந்தி முதலிய அனைத்தும் குணமாகும்.
* சீந்தில் இலையை வேப்ப எண்ணெய்யில் வதக்கி புண்ணின் மேல் வைத்துக் கட்டி வந்தால் புண் ஆறும்.
* சீந்தில் கொடியை மிளகுடன் மைய அரைத்து வெந்நீருடன் உட்கொள்ளச் செய்தால் இதயத்தில் சேர்ந்துள்ள வாதம் தணியும்.
* சீந்தில் கொடிச் சாற்றை பருகச் செய்தால் வாதத்தால் ஏற்படும் பெரும் பாடு குறையும்.
* சீந்தில் கொடிச் சாற்றை தேன் கலந்து காலையில் பருகச் செய்தால் காமாலை தணியும்.
* சீந்தில் கொடி அடிக்கடி வரும் காய்ச்சலுக்கு சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது. இதிலுள்ள குணங்கள் காய்ச்சலில் அறிகுறிகளையும் முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவற்றை கூட விரட்டி அடிக்கிறது.
