சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை
கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் சித்த மருத்துவத்தில் கருப்பை தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. இது பொதுவாக, தென்னாப்பிரிக்காவின் கேப் மாநிலத்திலும், ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியின் மலைகளிலும், ஆப்பிரிக்காவின் தீவுகள், அராபியத் தீபகற்பம், மடகாஸ்கர் போன்ற அண்டைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (ஆந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது.
