நெப்போலியன்
நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும் , அரசியல் தலைவராகவும் இருந்தவர் . தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவருடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவர் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோ என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தார் . இவரது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவர் இரண்டாமவர் . இவருக்குநெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். அவர் பிறப்பதற்கு 15 மாதங்களுக்கு முன்புதான் கார்சிக்காவை ஃபிரான்ஸ் கைப் பற்றியது. தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக் கொண்டார்.
இவரது தந்தை கார்லோ பொனப்பார்ட்டே ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆம் ஆண்டில் 16 ஆம் லூயியின் அரசவையில் கோர்சிக்காவின் பேராளனாக இவர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் லெட்டிசினா ராமோலினோ ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார்.நெப்போலியனுக்கு யோசேப்பு என்னும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, போலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, அசாக்சியோ பேராலயத்தில் திருமுழுக்குப் பெற்றார் .
பிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்விகற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளித்தன.1779 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தார் . மே மாதத்தில், பிரையேன்-லே-சத்து என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தார் . இவர் அதிக கோர்சிக்கத் தொனியுடனே பிரெஞ்சு மொழியைப் பேசியதுடன் சரியான எழுத்துக் கூட்டலையும் இவர் கற்றுக்கொள்ளவேயில்லை. இதனால் இவர் அவரது உடன் மாணவர்களது கேலிக்கு உள்ளானார். கணிதத்தில் திறமை பெற்றிருந்ததோடு, வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது.
1785 செப்டெம்பரில் பட்டம்பெற்று வெளியேறிய நெப்போலியன், லா பெரே கனரக ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகப் பணியில் அமர்ந்தார் . 1789 மே புரட்சி தொடங்கியதற்குப் பின் வரை, நெப்போலியன், வலன்சு, டிரோம், ஆக்சோன் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார் . இக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு கோர்சிக்கா, பாரிசு ஆகிய இடங்களில் இருந்தார் . தீவிரமான கோர்சிக்கத் தேசியவாதியான நெப்போலியன் 1789ல் கோர்சிக்கத் தலைவரான பாசுக்குவாலே பாவோலி என்பவருக்குக் கடிதம் எழுதினார் .
"தேசம் அழிந்து கொண்டு இருக்கும் போது நான் பிறந்தேன். நமது கடற்கரைகளில் இறக்கப்பட்ட முப்பதினாயிரம் பிரான்சியர்கள் நமது சுதந்திரத்தை குருதி அலைகளுக்குள் அமிழ்த்தினர். இந்த வெறுக்கத்தக்க காட்சியே எனக்கு முதலில் புலப்பட்டது."
நெப்போலியன், புரட்சியின் தொடக்கக் காலத்தை கோர்சிக்காவில் செலவிட்டார் . அப்போது அரசியல் வாதிகள், புரட்சியாளர்கள், கோர்சிக்கத் தேசியவாதிகள் ஆகியோரிடையே நிகழ்ந்த மும்முனைப் போரில் யாக்கோபியப் புரட்சியாளர் தரப்பில் இணைந்து நெப்போலியன் போர் புரிந்தார். இப்போரில் நெப்போலியன் கோர்சிக்கப் போராளிகளின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் தன்னார்வப் படைப் பிரிவொன்றுக்கு நெப்போலியன் தலைமை தாங்கினார் . அளவுக்கு மேலாகவே விடுமுறை எடுத்துக்கொண்டதோடு, கோர்சிக்காவில் பிரான்சுப் படையினருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தபோதும் கூட, 1792 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு பிரான்சுப் படையில் "கேப்டன் " தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது.
நெப்போலியனுக்குத் தமது திறமையைக் காட்டும் வாய்ப்பு 1793 இல் தூலோன் முற்றுகையின் போது ஏற்பட்டது. (அப்போது ஃபிரான்ஸ் அந்நகரை ஆங்கிலேயரிடமிருந்து திரும்பக் கைப்பற்றியது). அப்போது நெப்போலியன் பீரங்கிப் படை அதிகாரியாக இருந்தார். (அதற்குள்ளாக அவர் தமது கார்சிக்கா தேசியவாதக் கொள்கையைக் கைவிட்டுத் தம்மை ஒரு ஃபிரெஞ்சுக் குடிமகனாகவே கருதினார்). தூலோன் வெற்றி அவருக்குப் பதவி உயர்வை அளித்தது. 1796 இல் அவர் இத்தாலியில் ஃபிரெஞ்சுப் படையின் தளபதியானார். அங்கு 1796 - 97 இல் அவர் மாபெரும் வெற்றிகளைப் பெற்றார். பிறகு வீரராக அவர் பாரிஸ் திரும்பினார்.
1798 இல் நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்தார். அப்படையெடுப்பு படுதோல்வியாக முடிந்தது. நிலத்தில் நெப்போலியனின் படைகள் பொதுவாக வெற்றிப் பெற்றன. ஆனால் ஆங்கிலேய கப்பற்படை நெல்சன் பிரபுவின் தலைமையில் ஃபிரெஞ்சு கப்பற்படையை அழித்தது. 1799 இல் நெப்போலியன் தம் படையை எகிப்தில் விட்டு விட்டு ஃபிரான்ஸ் திரும்பினார்.
ஃபிரான்ஸ் திரும்பிய நெப்போலியன் ஃபிரெஞ்சு மக்கள் தம் இத்தாலியப் படையெழுச்சியின் வெற்றிகளை மட்டும் நினைத்ததையும், எகிப்திய படையெடுப்பின் படுதோல்வியை மறந்து விட்டதையும் கண்டார். இதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அபேசியேயுடனும் பிறருடனும் சேர்ந்து அரசாங்கத்தைக் கவிழ்த்தார். அதன் விளைவாக கான்சல்களின் குழு ஆட்சி ஏற்பட்டது. நெப்போலியனின் படைத்துறை வல்லாட்சிக்கு ஒரு முகமூடியாகவே இருந்தது. அவரோ அரசாங்கத்தைக் கவிழ்த்த பிறரையும் விரைவில் விஞ்சினார்.
நெப்போலியன் வியத்தகு விரைவுடன் உயர் அதிகாரத்தைப் பெற்றார். ஆகஸ்ட் 1793 இல் தூலோன் முற்றுகைக்கு முன் அவர் யாருக்கும் தெரியாத, ஃபிரெஞ்சு குடிமகன் என்று கூட சொல்ல முடியாத, 24 வயதுள்ள ஒரு கீழ் அதிகாரியாகவே இருந்தார். 6 ஆண்டுக்குள்ளாக 30 வயதுள்ள அவர் ஃபிரான்சின் ஈடற்ற தலைவரானார். அப்பதவியில் 14 ஆண்டுகளாக இருந்தார்.
நெப்போலியன் ஆட்சியிலிருந்தபோது ஃபிரான்சின் ஆட்சித் துறையையும் சட்ட முறையையும் பெரிதும் திருத்தியமைத்தார். எடுத்துக்காட்டாக, அவர் நிதி அமைப்பையும், நீதித் துறையையும் சீர் திருத்தினார். ஃபிரான்சின் வங்கியையும், ஃபிரெஞ்சுப் பல்கலைக் கழகத்தையும் நிறுவினார். ஃபிரெஞ்சு ஆட்சித் துறையை ஒழுங்குப்படுத்தினார். இம் மாற்றங்கள், ஃபிரான்சின் முக்கிய நிலையான விளைவுகளை ஏற்படுத்திய போதிலும், உலகைப் பெரிதும் பாதிக்கவில்லை.
நெப்போலியன் செய்த சீர்திருத்தங்கள் ஃபிரான்சின் எல்லைகளையும் கடந்து பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. அதில் ஒன்று தான் நெப்போலியனின் சட்டத் தொகுப்பு எனப்படும் புகழ்மிகு ஃபிரெஞ்சு உரிமையியல் சட்டத் தொகுப்பு. பல வகைகளில் அச்சட்டத் தொகுப்பில் ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்கள் பொதிந்திருந்தன. எடுத்துக்காட்டாக, அச்சட்டத் தொகுப்பின்படி பிறப்பின் அடிப்படையில் எவர்க்கும் சிறப்புரிமைகள் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆயினும் இத்தொகுப்பு பழைய ஃபிரெஞ்சு சட்டங்களையும் வழக்கங்களையும் ஓரளவு சார்ந்திருந்ததால் ஃபிரெஞ்சு மக்களும் வழக்கறிஞர்களும் அதை ஏற்கவில்லை. பொதுவாக அது மிதமானதாகும். நன்கு தொகுக்கப் பெற்றதாகும். சுருக்கமாகவும், மிகத் தெளிவாகவும் எழுதப் பெற்றதாகவும் இருந்தது. ஆகவே, அச்சட்டத் தொகுப்பு ஃபிரான்சில் நிலைத்து நின்றது. மட்டுமல்லாமல், ஓரளவு மாற்றங்களுடன் பல நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (இன்றைய ஃபிரெஞ்சு உரிமையியல் சட்டத் தொகுப்பு நெப்போலியன் சட்டத் தொகுப்பைப் போன்றேயுள்ளது.)
நெப்போலியன் எப்போதுமே தாம் ஃபிரெஞ்சுப் புரட்சியின் பாதுகாவலரென்று வலியுறுத்தி வந்தார். ஆயினும் 1804 இல் அவர் தம்மைத் தாமே ஃபிரான்சின் பேரரசராக்கிக் கொண்டார். மேலும் சகோதரர் மூவரை ஐரோப்பிய அரசுகளின் அரியணையில் அமர்த்தினார். இச்செயல்களைக் கண்டு ஃபிரெஞ்சுக் குடியரசு வாதிகள் வெகுண்டனர். அவை ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்களையே சிதைத்து விட்டதாக அவர்கள் கருதினர். ஆயினும் நெப்போலியனின் உண்மையான இடர்ப்பாடுகள் அயல்நாட்டுப் போர்களினாலேயே எழுந்தன.
நெப்போலியன் 1802 இல் ஏமியன்சில் இங்கிலாந்துடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அது பத்தாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்துவந்த போர்களுக்குப் பிறகு ஃபிரான்சுக்கு ஓய்வளித்தது. ஆயினும் அடுத்த ஆண்டே அவ்வுடன்படிக்கை முறிந்தது. இங்கிலாந்துடனும் அதன் நட்பு நாடுகளுடனும் நீண்டகாலப் போர் தொடங்கியது. நெப்போலியனின் படைகள் நிலத்தில் வெற்றிகளைக் குவித்தப் போதிலும், இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு அதன் கப்பற்படையை முறியடிக்க வேண்டியிருந்தது. ஆனால் 1805 இல் ட்ராஃபால்கர் போரில் ஆங்கிலேய கப்பற்படை மாபெரும் வெற்றி பெற்றது. ஆகவே, இங்கிலாந்தின் கடன் வலிமை குலையவில்லை. ட்ராஃபால்கர் போருக்கு ஆறு வாரங்கள் கழித்து நெப்போலியன் (ஆஸ்டர்லிட்ஸில் ஆஸ்திரிய ரஷ்யப் படைகளை முறியடித்து) மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், கடற்போரில் அவர் அடைந்த தோல்விக்கு அதனால் ஈடுசெய்ய இயலவில்லை.
1808 இல் நெப்போலியன் ஃபிரான்சை ஒரு நீண்ட, பயனற்ற போரில் மூடத்தனமாக ஈடுபடுத்தினார். அப்போரில் ஃபிரெஞ்சுப் படைகள் ஐபீரியத் தீபகற்பத்தில் நீண்டகாலமாக அழுந்திக் கிடந்தன. ஆயினும், நெப்போலியனின் மாபெருந் தவறு அவரது ரஷ்யப் படையெடுப்பு, 1807 இல் நெப்போலியன் ரஷ்ய மன்னரைச் சந்தித்தார். டில்சிட் உடன்படிக்கையின்படி இருவரும் அணையா நட்புறவு கொள்ள இசைந்தனர். ஆனால் அந்நட்புறவு நாளடைவில் நலிவுற்றது.
ஜூன் 1812 இல் நெப்போலியன் தமது பெரும்படையுடன் ரஷ்யாவினுள் நுழைந்தார். அதன் விளைவு அனைவர்க்கும் தெரிந்தவையே, ரஷ்யப் படைகள் நெப்போலியனுடன் நேரில் போரிடுவதைத் தவிர்த்தன. ஆகவே நெப்போலியன் விரைவாக முன்னேற முடிந்தது. செப்டம்பரில் அவர் மாஸ்கோவைக் கைப்பற்றினார். ஆயினும் ரஷ்யர் நகரைக் கொளுத்தி விட்டனர். அதன் பெரும் பகுதி அழிந்து விட்டது. 5 வாரங்கள் மாஸ்கோவில் தங்கிவிட்டு ரஷ்யர்கள் பணிந்து அமைதி வேண்டுவார்களென்று வீணாக நம்பி, இறுதியில் நெப்போலியன் பின்வாங்கத் தீர்மானித்தார். ஆனால், அதற்குள்ளாகக் காலம் கடந்து விட்டது. ரஷ்யப் படைகளின் தாக்குதல்களும், ரஷ்யாவின் குளிர்காலத்தின் கடுமையும், ஃபிரெஞ்சு படைகளின் உணவுப் பொருள் பற்றாக்குறையும் ஒன்று சேர்ந்து பின்வாங்கிய ஃபிரெஞ்சு படைகள் நிலை குலைந்து ஓடச் செய்தன. நெப்போலியன் பெரும்படையில் பத்தில் ஒரு பகுதியினரே ரஷ்யாவிலிருந்து உயிருடன் வெளியேறினர்.
ஆஸ்திரியா, பிரஷ்யா போன்ற பிற ஐரோப்பிய நாடுகள் ஃபிரெஞ்சு ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய அதுவே தருணமென்பதை உணர்ந்தன. அவை ஒன்று சேர்ந்து நெப்போலியனை எதிர்த்தன. அக்டோபர் 1813 இல் லீப்சிக் போரில் நெப்போலியன் மற்றொரு மாபெரும் தோல்வியைத் தழுவினார். அடுத்த ஆண்டு அவர் அரியணை துறந்தார். இத்தாலியக் கரைக்கப்பாலுள்ள சிறிய எல்பா தீவுக்கு அவர் கடத்தப்பட்டார்.
1815 இல் நெப்போலியன் எல்பாவிலிருந்து தப்பி, ஃபிரான்ஸ் திரும்பினார். அங்கு மக்கள் அவரை வரவேற்று மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், பிற ஐரோப்பிய அரசுகள் உடனே அவர் மீது போர் தொடுத்தன. மீண்டும் ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குப் பிறகு வாட்டர்லூ போரில் இறுதியாக முறியடிக்கப்பட்டார். வாட்டர்லூ போருக்குப் பிறகு ஆங்கிலேயர் அவரை தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலினா எனும் சிறிய தீவில் சிறைப்படுத்தினர். அங்கு தான் அவர் தனது 51ஆம் வயதில் மரணம் அடைந்தார் .
நெப்போலியன் பற்றிய மதிப்பீடு : நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.
நெப்போலியன் படைத்துறை வாழ்க்கை வியத்தகு புதிராக இருக்கின்றது. படைத்திறன் சூழ்ச்சியில் அவரது அறிவு மிளிர்கின்றது. அதை மட்டும் வைத்து அவரை மதிப்பிடுவோமானால் அவரை எக்காலத்துக்குமுரிய மிக உயர்ந்த படைத்தளபதியாகக் கருதலாம். ஆனால் போர்த்திற நடவடிக்கைகளில் அவர் நம்ப முடியாத பெருந்தவறுகளைச் செய்தார். எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் மீது அவர் படையெடுத்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அவருடைய போர் நடவடிக்கைத் தவறுகள் எவ்வளவு அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றனவென்றால், நெப்போலியனுக்குப் படைத்துறைத் தலைவர்களுள் முதலிடம் தர இயலாது. இந்த இரண்டாம் கருத்து தவறானதா? இல்லை அழிவு தரும் தவறுகளைத் தவிர்க்கும் திறமை ஒரு படைத் தளபதியில் சிறப்புக்கு அளவுகோல், மகா அலெக்சாந்தர் ஜெங்கிஸ்கான், தாமர்லேன் போன்ற பெரும் தளபதிகளைப் பற்றி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அவர்களுடைய படைகள் ஒருபோதும் தோல்வியடையவில்லை. நெப்போலியன் இறுதியில் தோற்கடிக்கப்பட்டதால், அவருடைய அயல்நாட்டு வெற்றிகள் எல்லாம் நிலை பெறவில்லை. 1789 இல் ஃபிரெஞ்சுப் புரட்சி தொடங்கும் வேளையில் ஃபிரான்ஸ் பெற்றிருந்த நிலப்பரப்பைவிட, 1815 இல் நெப்போலியன் இறுதியாகத் தோல்வியுற்றபோது குறைவான நிலப்பரப்பைப் பெற்றிருந்தது.
நெப்போலியன் ஒரு தன்னல வெறியர். அவரைப் பலர் ஹிட்லருக்கு ஒப்பிடுவர். ஆனால், அவ்விருவருக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. ஹிட்லர் ஒரு கொடிய கொள்கையினால் உந்தப் பெற்றவர். ஆனால், நெப்போலியன் ஒரு பேராவலுள்ள சந்தர்ப்பவாதி. பயங்கரப் படுகொலைகள் செய்வதில் அவருக்குத் தனி ஈடுபாடு கிடையாது. நெப்போலியன் ஆட்சியில் ஹிட்லரின் கொடிய சிறைமுகாம்கள் போன்றவை இல்லை.
நெப்போலியனின் பெரும் புகழின் காரணமாக அவருடைய செல்வாக்கை அளவுக்கு அதிகமாக மதிப்பிடக் கூடும். அவரது ஆட்சியின் குறுகிய கால விளைவுகள் உண்மையிலேயே மிகுதியானவை. ஒருவேளை அவை அலெக்சாந்தர் படையெடுப்பின் விளைவுகளைவிட அதிகமாக இருக்கலாம். ஆனால், அவை ஹிட்லர் ஆட்சியின் விளைவுகளைவிடக் குறைவு. (நெப்போலியனின் போர்களின் போது 5,00,000 ஃபிரெஞ்சுப் போர் வீரர்கள் மடிந்தனர் என்றும், 2 ஆம் உலகப் போரின் போது 80,00,000 ஜெர்மானியர்கள் மடிந்தனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது) எவ்வகையில் பார்த்தாலும் ஹிட்லரைவிட நெப்போலியன் தம் காலத்தில் வாழ்ந்தோரின் உயிர்களைக் குறைவாகவே குலைத்தார்.
நீண்டகால விளைவுகளைப் பார்க்கும்போது நெப்போலியன் அலெக்சாந்தரைவிட குறைந்த முக்கியத்துவம் பெற்றுள்ளபோதிலும், ஹிட்லரைவிட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். நெப்போலியன் ஃபிரான்சின் விரிவான ஆட்சித்துறை மாற்றங்களைச் செய்தார். ஆயினும் ஃபிரெஞ்சு மக்கள் உலக மக்கள் தொகையில் எழுபதில் ஒரு பகுதிதான். அந்த ஆட்சித் துறை மாற்றங்களை நாம் சரியான நோக்கில் பார்க்க வேண்டும். கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்துள்ள தொழில்நுட்ப மாற்றங்களைவிட அவை ஃபிரெஞ்சு மக்களின் வாழ்க்கையைக் குறைவாகவே பாதித்துள்ளன.
ஃபிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை உறுதிப்படுத்தி ஃபிரெஞ்சு நடுத்தர வகுப்பினர் பெற்ற நலன்களை நிலைப்படுத்துவதற்கு நெப்போலியனின் காலம் தக்க காலமாக இருந்ததெனக் கருதப்படுகின்றன. 1815இல் ஃபிரெஞ்சு குடியரசு இறுதியாகத் திரும்பவும் நிலை நிறுத்தப்பட்டபோது, இம்மாற்றங்கள் எவ்வளவு நிலை பெற்றுவிட்டனவென்றால், பழைய ஆட்சியின் சமூக நிலைக்குத் திரும்பிச் செல்வது நிலைக்குத் திரும்பிச் செல்வது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதிருந்தது. மிக முக்கியமான மாற்றங்கள் நெப்போலியன் ஆட்சி ஏற்பட்டபோது, புரட்சிக்கு முந்திய நிலைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆயினும் நெப்போலியன் முடியாட்சி ஆர்வமுள்ளவராக இருந்தபோதிலும், ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்களை ஐரோப்பா முழுவதும் பரப்புவதில் முக்கிய பங்கேற்றார் என்பதில் ஐயமில்லை.
பிரெஞ்ச் தளபதி என்றதுமே நம் கண் முன் தோன்றுபவர் நெப்போலியன்தான். நெப்போலியன் போனபார்ட் சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், நிர்வாகியாகவும், தலைமைப் பண்பு மிக்கவராகவும் திகழ்ந்தார். வரலாறுகள் சொல்லும் பல தகவல்கள் வெறும் வரலாறுகளாகவே இருக்கும். ஆனால், நெப்போலியனைப் பற்றிய வரலாறு, நம் கல்விக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. வாழ்வின் இத்தனை உயரத்திற்குச் சென்ற நெப்போலியனின் பல நல்ல குணநலன்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவற்றை மாணவர்களும் வளர்த்துக் கொண்டால், பல உயரிய பதவிகளை அடையலாம்.
சிறு வயதில் இருந்தே புத்தகங்களை காதலிக்கத் துவங்கிவிட்டார் நெப்போலியன். இவரது அறிவுத் தேடல் எப்போதுமே அடங்கவில்லை. பிரெஞ்ச் சக்ரவர்த்தியாக கன நேரமும் ஓய்வின்றி கடுமையாக உழைத்த நாட்களிலும் சரி, செயின்ட் ஹெலெனாவில் இருந்த சிறைச்சாலையில் தன் இறுதி நாட்களை கழித்த போதும் சரி. அவர் எப்போதும் புத்தகங்களை விட்டு விலகியதில்லை. நெப்போலியன், தான் பேரரசராக இருக்கும் போதும் புத்தகங்கள் படிப்பதை மறக்கவில்லை. அவரது அரண்மனையில் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை பராமரித்து வந்தார்.
1808ஆம் ஆண்டுகளில் மிக இக்கட்டான போர் தருணத்தில் படைகளை நடத்திச் சென்றிருந்த நெப்போலியன் தன் நூலக பொறுப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நடமாடும் நூலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். 1000 புத்தகங்களை மார்ஜின்கள் எதுவும் இன்றி மிகவும் சிறிய எழுத்துருக்களால் பிரின்ட் செய்து அனுப்பவும் என்று இருந்தது. அதன்படி, அவர் எங்கு படைகளுடன் சென்றாலும், அங்கு இந்த நூலகமும் இருக்கும்.
வாழ்ந்து மிக உயரிய இடத்தை அடைந்து, இறுதி காலத்தை அடையும் வரை தனது அறிவுப் பசியை வளர்த்துக் கொண்டு இருந்த நெப்போலியனை போன்று நாமும் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்து படித்தல் புத்தகம் படிப்பது என்றால் எதையாவது ஒன்றை படித்துக் கொண்டே இருப்பது அல்ல. தேர்ந்தெடுத்து படிப்பது தான் முக்கியம். தேவையில்லாத புத்தகங்களை எல்லாம் படித்து நேரத்தை வீணடிப்பதை விட, நமது நேரத்தை பொன்னானதாக மாற்றும் புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் அறிவு நமக்கு வளர வேண்டும். அறிவையும், திறனையும் வளர்க்கும் வகையிலான புத்தகங்களையே நெப்போலியன் வாசித்தார். அதேப்போல, உங்கள் ஆர்வத்திற்கும், திறமைக்கும் ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
நேர மேலாண்மை மாறி வரும் நாகரீக உலகில், பாடப்பிரிவுகளில் நேர மேலாண்மை என்பது ஒரு கடினமானப் பாடமாக உள்ளது. ஆனால், நெப்போலியன் தன் வாழ் நாள் முழுவதும் நேர மேலாண்மையின் தளபதியாக இருந்தார். அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்துள்ளார். இந்த நிமிடத்தில் வாழுங்கள் நெப்போலியனின் மிக முக்கியமான வாழ்க்கை தத்துவம் அது. எப்பொழுது ஏதாவது ஒரு பிரச்சினை கண் முன் வருகிறதோ, அப்பொழுது மற்ற எல்லாவற்றையும் அவர் மறந்து விடுவார், அந்த பிரச்சினை பற்றிய எல்லா மூலை முடுக்கு விஷயங்களையும் ஆராய்ந்து அதற்கான வழியைத் தேடுவார்.
சிக்கனம் நெப்போலியன் தன் சொந்த வாழ்வில் சிக்கனவாதியாக வாழ்ந்துள்ளார். எப்போதும் தேவைக்கேற்ப வாழுங்கள், வீட்டில் சிக்கனமாக இருங்கள், பொது இடத்தில் சிறப்பாக இருங்கள் என்பதுதான் நெப்போலியனின் அறிவுரையாகும்.
இருவேளை உணவு மட்டுமே உண்பார் நெப்போலியன். இவரது வருமானத்தில் சேமிப்புதான் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும். அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல், நாம் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். வெறும் வார்த்தையாலோ, பேச்சாலோ அல்லாமல் வாழ்ந்து காட்டி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் நெப்போலியன். இவர் வடிவமைத்த சட்டம் தற்போதும் பல நாடுகளாலும், சட்டக் கல்லூரி, சட்டப் பள்ளிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நெப்போலியன் தனது படைகளால்தான் புகழ்பெற்றார். ஆனால், அந்த படைகளை நடத்திச் செல்ல அவரது ஒருங்கிணைப்பு, நிர்வாகத்திறன், தலைமைப் பண்பு போன்றவைதான் உதவின. இந்த திறன்களை மாணவர்களாகிய நாமும் கையாண்டு நமது லட்சியத்தின் பாதையில் செல்வோம்.
