மிதிலைக் காட்சிப் படலம் - 615

bookmark

சீதாபிராட்டியின் மனநோய்

காதல் நோயுற்ற சீதையின் தோற்றம்
 
615.

அருகில் நின்று அசைக்கின்ற ஆலவட்டக் கால்
எரியினை மிகுத்திட. இழையும். மாலையும்.
கரிகுவ. தீகுவ. கனல்வ. காட்டலால்.
உருகு பொற் பாவையும் ஒத்துத் தோன்றினாள்.
 
அருகில்    நின்று-   பக்கத்திலே    இருந்து;   அசைக்கின்ற
ஆலவட்டம்   -  (தோழியர்)  வீசுகின்ற ஆலவட்டங்களின்;   கால்
எரியினை  மிகுத்திட  -    காற்றானது   காமத்  தீயை  வளர்க்க;
இழையும்  மாலையும்  -  (சீதையணிந்த) அணிகளும் பூமாலைகளும்;
கரிகுவ -  கரிந்தும்;  தீகுவ -  தீய்ந்தும்;   கனல்வ  -  எரிந்தும்;
காட்டலால்   -  ஆகிவிட்டமையால்;  உருகுபொன்  பாவையும் -
(நெருப்பில்  உருகு  கின்ற  பொன்னாலாகிய  பாவையை;  ஒத்து -
போன்று; தோன்றினாள் - காணப்பட்டாள்.   

அணி: தற்குறிப்பேற்ற அணி. அணிந்த அணிகள். மாலைகள் காமத்
தீயால்  கருகியும்  தீய்ந்தும்  எரிந்தும்  போயின;தவிர.   அச்சீதையும்
நெருப்பில்  உருகும்  பொற்பாவைபோல் ஆகிவிட்டாள்.  ஆலவட்டம்:
பெருவிசிறி.                                              52