மிதிலைக் காட்சிப் படலம் - 616
காதல் நோயால் பிராட்டி புலம்பல் (616-622)
616.
‘அல்லினை வகுத்தது ஓர் அலங்கற் காடு’ எனும்;
‘வல் எழு ; அல்லவேல். மரகதப் பெருங்
கல்’ எனும். ‘இரு புயம்’ ; ‘கமலம் கண்’ எனும்;
‘வில்லொடும் இழிந்தது ஓர் மேகம்’ என்னுமால்.
(சீதை) அல்லினை வகுத்தது- இருளைக் கொண்டு; ஓர்அலங்கல்
காடு - அமைக்கப்பட்ட பூமாலைகள் உள்ள காடு (இராமனதுமுடி);
என்னும் - என்று சொல்வாள்; இருபுயம் - அவனுடைய இரண்டு
தோள்களும்; வல் எழு - வலிய தூண்களாம்; அல்லவேல் - அவை
இல்லாவிட்டால்; மரகதப் பெருங்கல் - மரகதக் கற்கள் மயமான
பெருமலைகளே; எனும் . என்பாள்; கண் கமலம் எனும்
- (அவனுடைய) கண்கள் செந்தாமரை மலர் என்பாள்;
வில்லொடும் இழிந்தது - (அவனது திருமேனி) இந்திரவில்லுடன்
வானத்திலிருந்து இறங்கிய; ஓர்மேகம் என்னும் - ஒரு மேகம் என்று
சொல்வாள்.
இராமனிடம் தன்மனம் செல்லப் பெற்ற சீதை அவனைக் குறித்து
வாய் பிதற்றுவதாகும். அல் வகுத்ததோர் காடு: குடுமியின் கருமையும்.
மயிர்களின் அடர்த்தியும் கருதியது. எழு - இரும்புத்தூண்: தோள்கள்
திரண்டு உருண்டு நீண்டிருத்தலால் தோளுக்கு இரும்புத் தூண்
உவமையாயிற்று. 53
