மிதிலைக் காட்சிப் படலம் - 621

bookmark

621.

‘உரைசெயின். தேவர்தம் உலகு உளான் அலன்-
விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன். மார்பின் நூலினன்.
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால்.
 
உரை  செயின் - (அவ் ஆண்மகனை இன்னான் என்று) சொல்லப்
புகுந்தால்;  தேவர்தம்  உலகு - தேவர் உலகத்தில்; உளான் அலன்
-  உள்ள  ஒரு  விண்ணவன்  அல்லன் ;  விரைசெறி   தாமரை -
(ஏனெனில்)   மணமுள்ள     செந்தாமரை   போலும்;   இமைக்கும்
மெய்ம்மையான்  -   கண்கள்    இமைக்கும்    தன்மையுடையவன்;
வரிசிலை தடக்கையன் -  கட்டமைந்த  வில்லை   ஏந்திய  பெரிய
கையையுடையவன்;   மார்பின்  நூலினன்   -   மார்பில்   பூணூல்
தரித்தவன்  (அவன்);  அரசு இளங்குமரனே -   இளம்பருவமுடைய
அரச   குமாரனாகவே;  ஆகல் வேண்டும் - இருத்தல் வேண்டும்.  

அவனை     முதலில்   தேவனோ   என்று      ஐயப்பட்டவள்
கண்ணிமைத்தலால்   அந்த  ஐயம்  நீங்கினாள்.  பின்   கைவில்லும்.
மார்பின்   நூலும்  கண்டமையால்  ‘அரசகுமாரனே  அவன்’  என்று
தெளிந்தாள். அணி: ஐயவணி.                               55