லெனின்
1920 ஏப்ரல் மாதம் 22ல் மாஸ்கோ நகரத்தில் ஒரு தலைவர், தனக்கு பிறந்த நாள் கொண்டாடுவது கூடாது என்று உத்தரவிட்டார். அதையும் மீறி ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட்டம் நடத்தினர். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி அக்கூட்டத்தில் “சில மனிதர்களைப் பற்றி பேசுவது எளிதன்று. அவர்களுடைய சிறப்புகளையும் குறிப்பிடுவது இயலாது. நான் சொல்லோவியம் தீட்டுவதில் வல்லவன் என்றாலும் அவருடைய உருவத்தை உங்கள் முன் சித்தரிக்க சரியான சொற்கள் கிடைக்காமல் தவிக்கிறேன்” என்றார்.
அந்த ஒப்பற்ற தலைவர் தான் லெனின். விளாடிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர். இல்யா உல்யனாவ் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அண்ணன் அலெக்ஸாண்டர், ஜார் மன்னனை கொல்ல முயன்றதுக்காக 1887 ஆம் ஆண்டு மார்ச் 1ம் நாள் கைது செய்யப்பட்டரார். அதனையடுத்து 1887 ஆம் ஆண்டு மே 8ம் நாள் ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார்.
1887 ஆம் ஆண்டு கசான் பல்கலைக் கழகத்தில் லெனின் சேர்ந்தார், அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கினார். அங்கு தனது சகோதரர் அலெக்ஸாண்டரைப் போல தீவிரமான கருத்துகளை உடைய லாசர் போகோராக் (Lazar Bogoraz) உடன் சந்திப்பு நேர்ந்தது. லாசர் மக்கள் சுதந்திர கட்சி என்ற உழைப்பாளர்களின் நலன் சார்ந்த இடதுசாரி அமைப்பினை ஏற்படுத்தியிருந்தவர்.
லெனின் பல்கலைகழகத்தில் சட்டப்படப்பினை படித்தார். இவர் காலத்தில் ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் கொடுங்கோல் ஆட்சியாளர்களாக இருந்தனர். மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் , ஆடம்பர வாழ்க்கையில் கவனம் செலுத்தினர். இதனால் வயிற்றுப் பசிக்கு ஆளாகி, பட்டினியால் செத்த தொழிலார்களின் எண்ணிக்கைகள் கணக்கில் அடங்கா.
அப்பொழுது மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார், இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக் கழகம் அவருக்கு படிப்பு தர மறுத்தது. இதனையடுத்து லெனின் தானே சட்டப்படிப்பினை ஒன்றரை வருடத்தில் படித்து தேர்ந்ததாக கூறப்படுகிறது.
தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்பரை செய்தார். 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல். ஸ்பார்க் என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.
விளாடிமிர் லெனின் தன் இளமைக் காலத்தில் நடாயா கிரூப்ஸ்காயா என்ற பள்ளி ஆசிரியயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரையும் ஜார் அரசு சைபீரியாவிற்கு நாடுகடத்தியது.
1893ல் குடியானவர்களின் வாழ்க்கையில் புதிய மறு மலர்ச்சி என்ற முதல் கட்டுரையையும் வெளியிட்டார் லெனின். அப்போது அவருக்கு வயது 23தான். ஒரு சமயம் தன்னை சந்திக்க வந்த மனைவி (குரூப்ஸ்கயா)யிடம் ரகசிய செய்தியை சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று சிந்தித்தார். மனைவியிடம் உரையாடினார் கீழ்க்கண்டவாறு ‘எனக்கு கொடுத்த நூல்களை கொடுத்துவிட்டேன். தங்கை மரியாவின் நூலையும், அறை எண் தெரியுமா?’ என கேட்டவுடன் குரூப்ஸ்கயா, 193 என்றார். ஆனாலும் சம்பந்தமில்லாமல் பேசுவது அப்போது புரியவில்லை. ஏதோ மர்மம் இருக்கிறது என உணர்ந்த குரூப்ஸ்கயா, தங்கை மரியாவிடம் உள்ள நூல் பக்கம் 193ஐ புரட்டினார். அதில் தொழிலாளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரகசிய சுற்றறிக்கை செய்தி இருந்தது. இப்படியாக எதிரிவர்க்கத்தினை ஏமாற்றி, தனது வர்க்கத்தினை தன் தந்திரத்தால் வழி நடத்தியது என இது போன்ற பல உதாரணங்கள்.
புரட்சி வெற்றி பெற்ற நேரத்தில் லெனின் அறைக்கு இரு தொழிலாளர்கள் அவரை சந்திக்க வந்தனர். லெனினின் செயலாளர் அவர்களை அழைத்துச் சென்றார். அமைச்சரவை தலைவரான லெனினின் சாதாரண அறையை பார்த்து வியந்தனர். தன்னைப் பார்க்க வந்தவர்களை சந்திக்க வந்த லெனின், அவருடைய அதிகாரப்பூர்வ இருக்கையில் அமராமல் நேரடியாக தொழிலாளர்களின் பக்கத்தில் வந்தமர்ந்து, என்ன விசயம் என கேட்டார். சந்திக்க வந்தவர்கள் லெனினின் அடக்கத்தை பணிவை கண்டு வியந்தனர். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லத் தயங்கினர். இருந்த போதும் என்ன விசயம் என கேட்டார். தொழிலாளர்கள், நாங்கள் தொழிற் சாலைகளில் பணிபுரியவே அனுபவம் மிக்கவர்கள். எங்களால் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய முடியாது என மறுத்தனர். ஆனால் லெனின், தோழர்களே நமக்கு நம்பிக்கையான ஆள் அமைச்சரவை செயலகத்திற்கு தேவை. நாம் பழைய அமைச்சரவை அமைப்பை உடைத்துவிட்டோம். இப்போது இருப்பது புதிய அமைப்பு. இதற்காகத் தான் நாம் போராடினோம். இங்கே நாம்தான் பணியாற்ற வேண்டும். நாம் கற்றுக் கொள்ளலாம். பணியாற்ற சிரமம்தான். தவறு செய்தால் திருத்திக்கொள்வோம். இல்லையெனில் கற்றுக்கொள்வோம். அமைச்சரவை தலைவர் என்ற முறையில் கற்றுக்கொள்ளுங்கள் என கூறாமல், கற்றுக்கொள்வோம் என லெனின் தன்னடக்கத்துடன் கூறியது, சந்திக்க வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் அவர்கள் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டனர்.
எதிர்ப்புரட்சியாளர்கள் லெனினை குறிவைத்து தாக்க திட்டமிட்டனர். முதலில் 1918 ஜனவரி 1ல் காரில் வந்த போது லெனினை நோக்கிச் சுட்டனர். அருகில் இருந்த சுவிஸ் கம்யூனிஸ்ட் தலைவர் பிளாட்டன், லெனின் தலையை அமுக்கி காப்பாற்றினார். பிளாட்டன் கையை துப்பாக்கி ரவை பதம் பார்த்தது. லெனின் மயிரிழையில் உயிர்தப்பினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு கூட தன்னுடைய பணியில் எந்தவித தொய்வும் இன்றி பணியாற்றினார்.
1918 ஆகஸ்ட் 30 பெத்ரோ கிராத் நகர் கூட்டத்தில் லெனின் பேசவேண்டும். தோழர்கள், வரவேண்டாம்; இங்கே நம் தோழரை எதிர்ப்புரட்சியாளர்கள் கொன்று விட்டார்கள் என்ற எச்சரித்த பின்பும், சிரித்தபடியே ‘அலைகளுக்கு பயந்தால் மீனவர் மீன் பிடிக்க முடியாது எனவும், மிருகத்திற்கு பயந்தால் வேடன் வேட்டையாட முடியாது எனவும் கூறிவிட்டு, புரட்சியாளர்கள் சமூக மாற்றத்திற்காக போராடுபவர்கள்; உயிருக்கு பயந்தால் துணிச்சலாக செயல்பட முடியாது என கூறிவிட்டு கூட்டத்திற்கு செல்ல லெனின் தயாரானார். கூட்டத்தில் பேசவேண்டிய, அமைச்சரவை கூட்டத்தில் பேசவேண்டியது பற்றி சிந்தித்த படியே காரில் பயணித்தார். திட்டமிட்டபடி கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் லெனின் உரையாற்றினார். கூட்டம் முடிந்து தொழிலாளர்களுடன் திரும்பும்போது திடீரென்று துப்பாக்கி சத்தம், ஆம்; ஒரு குண்டு லெனின் இடது கையில், இரண்டாவது குண்டு கழுத்தில், மூன்றாவது குண்டு முதுகில்; லெனின் கீழே சாய்ந்தார். தொழிலாளர்கள் பதறினர். லெனின், வீட்டுக்கு வண்டியை ஓட்டச் சொன்னார். மூன்று குண்டுகள் பாய்ந்த போதும் தங்கள் இருப்பிடம் மூன்றாவது மாடியில் இருப்பதால் லெனினிடம் மூன்றாவது மாடிக்கு தொழிலாளர்கள் தூக்கிச் சொல்வோம் என்று கூறியபோது மறுத்த லெனின், நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று துணிச்சலாகக் கூறி தொழிலாளர்களின் தோள்களை பிடித்துக் கொண்டே மூன்றாவது மாடிக்குச் சென்றார். தங்கை கதறியபோது “நீ கதறாதே; சின்னக்காயம்தான் உன் அலறல் குருப்ஸ் கயாவை (மனைவியை) கலவரப்படுத்தும்” என்று கூறினார். மூன்று குண்டுகள் தாக்கியபோதும் பதறாமல் மக்கள் பணியில் தொடர்ச்சியாக முன்னேறினார். மீண்டுவந்தார். சோசலிச அரசுக்கு தலைமையேற்று நடத்தினார். விடாமுயற்சி, வைராக்கியம், ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி, தன்னடக்கம் போன்ற பல்வேறு நல்ல பண்புகளைக் கொண்டவர் லெனின். ஜார் மன்னனையும், முதலாளிகளையும், நிலப் பிரபுக்களின் கூட்டணியையும், போலிப் புரட்சிவாதிகளையும் வென்றவர் லெனின்.
முதலாம் உலகப் போரினைத் தொடர்ந்து ரஷ்யாவில் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். வறுமை, பட்டினி சூழ்ந்தது. இப் போரினை லெனின் போன்ற தலைவர்கள் கொள்ளக்காரப் போர் என்று வர்ணித்தனர். ஜார் மன்னருக்காக போராடிய தொழிலாளர்கள் தாங்கள் முதலாளிகளால் சுரண்டப்படுவதை லெனின் பிரட்சாரம் மூலம் அறிந்தனர். போரினை நிறுத்த மக்கள் அனுப்பிய மனுக்கள் ஜார் மன்னரால் நிராகரிப்பட்டதால், 1917ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களால் இப்புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இப்புரட்சியால் ரஷ்யாவின் ஆட்சியை கைப்பற்றிய மிதவாத கம்யுனிஸ்டுகள் ஜார் மன்னரையும் அவரது குடும்பத்தினைரையும் சுட்டுக் கொன்றார்கள். இருப்பினும் உணவுப் பற்றாற்குறை ரஷ்யாவில் நிலவி வந்தது. பின்னர் லெனின் கொண்டு வந்த பலதரப்பட்ட திட்டங்களால் தொழிலார்களின் வாழ்வு சிறந்தது
லெனின் ஒரு செயல்வீரராக விளங்கினார். ரஷியாவில் பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியல் செயற்படுத்தினார். 1917 நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள். லெனின் முக்கியமாக அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளில் மூலமாகவும் கணிசமான அளவுக்குச் செல்வாக்கு பெற்றார்.
லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை!" என்று அவர் வலியுறுத்தினார். "தொழிலாளர் சர்வாதிகாரம்" பற்றி மார்க்ஸ் இங்குமங்கும்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லெனின் இந்தக் கோட்பாட்டைத் தீவிர வெறியுடன் பின்பற்றினார். "தொழிலாளர் சர்வாதிகாரம் என்பது வன்முறையின் அடிப்படையில் அமைந்த அதிகாரமேயன்றி வேறில்லை. அந்த அதிகாரத்தை சட்டத்தினாலோ, ஆட்சியினாலோ கட்டுப்படுத்த முடியாதது" என்று அவர் நம்பினார். லெனினுடைய பொருளாதாரக் கொள்கைகளை விட, சர்வாதிகாரம் பற்றிய அவரது கொள்கைகள் தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். சோவியத் அரசின் தனிச் சிறப்புக்குக் காரணம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல (வேறு பல நாடுகளிலும் சோசலிச அரசுகள் ஆள்கின்றன). மாறாக அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் உத்திகள் தாம் தனித்தன்மை வாய்ந்தனவாகும். லெனினின் காலம் முதற்கொண்டு உலகின் ஒரு முறை நிலையாக வேரூன்றி விட்ட எந்த ஒரு பொதுவுடைமை அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை.
லெனின் தமது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார். அவர் ஈடிணையற்ற எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய நூல்கள் 55 தொகுதிகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. லெனின் தமது புரட்சிப் பணியில் தீவிர ஈடுபாடுடையவராக இருந்தார். அவர் தமது குடும்பத்தை நேசித்த போதிலும், அந்தக் குடும்பப் பாசம் தமது அரசியல் பணிக்கு இடையூறாக இருக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
லெனின் மரணம்: லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்து வந்தது அவருடைய உடல் நலத்தைச் சீர் குலைத்தது. அதனால் 1922 மே மாதம் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவர் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியது. பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. டிசம்பரில் இவரது வலக்கையும் செயல் இழந்தது. அது முதல் முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவினால் நாடெங்கும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமூட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைக்கப் பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
