வரைக்காட்சிப் படலம் - 902

bookmark

ஓர் மதகளிற்றின் செயல்

902.

மாறு காண்கிலதாய் நின்று.
   மழை என முழங்கும்
தாறு பாய் கரி. வன கரி
   தண்டத்தைத் தடவி.
பாறு பின் செல. கால் எனச்
   செல்வது. பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம்
   ஆறு போன்றதுவே.
 
மாறு- (தனது) பகையை; காண்கிலதாய் நின்று - காணப் பெறாமல்
நின்று;  மழை என முழங்கும் - மேகம் போல இடித்தொலிக்கின்றதும்;
தாறு  பாய் கரி  -  இரும்பு  முள்ளால் குத்தப் பெற்றதுமாகியயானை;
வனம்  கரி தண்டத்தை  -  காட்டு யானைகள் சென்ற ஒரு வழியை;
தடவி - பின்பற்றி; பாறு பின்செல - பருந்துகள் பின்னால் தொடர்ந்து
வர;  கால் எனச்  செல்வது  -  காற்றைப் போல விரைந்து செல்வது;
பண்டு ஓர் ஆறு போகிய- முன்பு நதி சென்ற வழியே; ஆறு போம்
- செல்லுகின்ற; ஆறு - ஆற்றை; போன்றது - ஒத்தது.

தனக்கு    ஒரு  பகையைக்  காணமுடியாமல்  காட்டு  யானைகள்
கூட்டமாகச்  செல்லும் பெருவழியில் அவற்றின்  மோப்பத்தையுணர்ந்த
யானை   (சேனை)   யொன்று.  அவை  பகையினம்  என்று  கருதிப்
பாகனுக்கும்  அடங்காமல்.  வெறிகொண்டு  அவ்  யானைக்  கூட்டம்
சென்ற   வழியே   தனிவழியை   உண்டாக்கிக்  கொண்டு  விரைந்து
சென்றது.  அது  பழமையான   நதி  செல்லும்  வழியை  நாடியவாறு
மற்றொரு   சிற்றாறு  பெருக்கெடுத்துச்  செல்வது  போன்று  உள்ளது
என்றார்.  யானையின்  வேகத்தால்  பறவைகள்   சிதறப்பெறுவதாலும்.
எதிர்ந்த  உயிர்களைக்  கொன்று  செல்வதால்  அவற்றின்   இறைச்சி
வேட்கையாலும் ‘பாறு பின்செல’ என்றார். தண்டம்;  யானை செல்வழி.
                                                        5