வரைக்காட்சிப் படலம் - 905
தேரின் வருணனை
கருங்கல்லைப் பொன்னாக்கிய தேர்கள்
905.
‘தெருண்ட மேலவர் சிறியவர்ச்
சேரினும். அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்’
எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும். பொன் உருள்
உரைத்து உரைத்து ஓடி.
இருண்ட கல்லையும் தன் நிறம்
ஆக்கிய - இரதம்.
தெருண்ட மேலவர் - தெளிந்த அறிவுடைய பெரியோர்; சிறியவர்
சேரினும் - சிறியவர்களை (தாம் போய்ச்) சேர்ந்திருந்தாலும்; மருண்ட
அவர்தம் - அறிவுத் தெளிவில்லாமல் மயங்கிய அவர்களுடைய;
புன்மையை - இழி குணத்தை; மாற்றுவர் எனும் - போக்குவர் என்று
சொல்லுகின்ற; இது - இந்த வார்த்தை; வழக்கே - முறைமையானதே
(உலக இயல்பு); இரதம் - (ஏனெனில்) இரதங்கள்; பொன் உருள்
உருண்ட - பொன்னால் இயன்ற சக்கரங்கள் உருண்டு சென்ற;
வாய்தொறும் - இடங்கள்தோறும்; உரைத்து உரைத்து ஓடி
- (தம்) பொன்னை உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால்; இருண்ட
கல்லையும் - கருமையான பாறாங்கற்களையும்; தம் நிறம் ஆக்கிய-
(தம்) பொன்னிறமாகவே செய்யலாயின.
வேற்றுப் பொருள் வைப்பணி. தேரின் பொன்னிற உருளை
சென்றதால் அங்குள்ள பாறைகள் பொன்னிறத்தை அடைந்தன
என்பது. சேரினும் - எதிர்மறையும்மை. 8
