வரைக்காட்சிப் படலம் - 916
புழுதியாடிய யானையின் தோற்றம்
புழுதி படிய வரும் யானை
916.
மண் உற விழுந்து. நெடு வான் உற எழுந்து.-
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் - கார்
உண் நிற நறும் பொடியை வீசி. ஒரு பாகம்
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம்.
மண்ணுற விழுந்து - புழுதி (தன் மேல்) படியும்படி பூமியில்
விழுந்து; நெடு வானுற எழுந்து - வானத்தில் பொருந்துமாறு மேலே
எழுந்து; கார்நிறம் - தனது கரிய நிறத்தை; உண் நறும் பொடியை -
மறைக்கின்ற மணமுள்ள புழுதியை; ஒருபாகம் வீசி - ஒரு பக்கம்
கையால் வீசிவிட்டு; வெண்ணிறம் நறும்பொடி - ஒரு பகுதியில்
மட்டும் வெண்ணிறமான நறும்பொடியை; புனைந்த - அணிந்த;
மதவேழம் - மதயானையானது; கண்நுதல் பொருந்த வரு - சிவன்
தன்னிடம் பொருந்த வருகின்ற; கண்ணனின் - திருமால் போல; வரும்
- வரும்.
சிவனைத் தன் வலப்பக்கத்தே உடையவன் திருமால். ‘வலத்தனன்
திரிபுரம் எரித்தவன்’ - (திருவாய் 1-3-9). மேனியில் படிந்த பொடியை
ஒரு பக்கம் நீக்கி ஒரு பக்கம் மட்டும் அணிந்திருந்த யானை சங்கர
நாராயணத் திருகோலம் போலத் தோன்றியது என்பது கருத்து. 19
