வரைக்காட்சிப் படலம் - 923

bookmark

மதயானைகள் நீர்நிலைகளை விடாமை

923.

ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா.
பக்கம் இனம் ஒத்த. அயல் அலைக்க. நனி பாரா.--
மைக் கரி. மதத்த - விலை மாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன. புனல் சிறைகள் ஏறா.
 
ஒக்க     - தக்கவாறு; நெறி உய்ப்பவர் - நல்வழியிலே செலுத்தும்
பாகர்கள்;   உரைத்த  -  தெரிவித்த;  குறி  -  குறிப்பு  மொழிகளை;
கொள்ளா  -  ஏற்றுக்  கொள்ளாதனவும்; பக்கம் - இரு பக்கங்களிலும்;
இனம்  மொய்த்து - துணைப் பாகர்கள் கூடியிருந்து; அயல் அலைக்க
- (வேற்றிடம் செல்ல வொட்டாமல்) வருந்தித்  தடுக்கவும்; நனி பாரா -
சிறிதும்   பொருட்படுத்தாதனவாய்;   புனல்  சிறைகள்  ஏறா  -  நீர்
நிலைகளிலிருந்து   கரை   ஏறாதனவுமான;   மதத்த   மைக்கரி   -
மதத்தையுடைய  கரிய யானைகள்; ஒக்க நெறி உய்ப்பவர் - தகுதியாக
நல்வழியிலே  செலுத்துகின்ற  பெரியவர்;  உரைத்த  குறி கொள்ளா -
கூறும்  நன்மொழிகளைக்  கேளாமலும்;  பக்கம் இனம் - சுற்றத்தாரும்
நண்பரும்;   மொய்த்து  அயல் அலைக்க  -  கூட்டமாகத்  திரளும்
அயலவரும்   இடித்துக்  கூறவும்;  நனி  பாரா - (அவற்றை) கருத்தில்
கொள்ளாமலும்;விலைமாதர்    கலை     அல்குல்  -   வேசியரின்
மேகலையணிந்த   அல்குலிலே;    புக்கவரை  -  ஈடுபட்டு அழுந்திய
காமுகரை; ஒத்தன - ஒத்து விளங்கின. 

நன்னெறி    உய்ப்பவரின் குறிகளைக் கொள்ளாமலும் பக்கம் இனம்
அயல்  அலைக்கவும்  பாராமலும்  நீர்நிலைகளில் (சிறை) அழுந்துவதால்
மதயானைக்குக்   காமுகரை   உவமை  கூறினார்.  கலை  -  மேகலை
என்பதன்  முதற்குறை.   கொள்ளா.  பாரா.  ஏறா - வினையாலணையும்
பெயர்.                                                   26