வரைக்காட்சிப் படலம் - 924
பாடிநகர் கடலை ஒத்திருத்தல்
அட்டிலில் எழும் புகை
924.
துகில் இடை மடந்தையரொடு
ஆடவர் துவன்றி.
பகல் இடைய. அட்டிலில்
மடுத்து. எரி பரப்பும்
அகில் இடு கொழும் புகை
அழுங்கலின். முழங்கா
முகில் படு நெடுங் கடலை
ஒத்து உளது. அம் மூதூர்.
துகில் இடை மடந்தையரொடு - ஆடையணிந்த இடையையுடைய
மகிளரோடு;ஆடவர் துவன்றி - ஆண்கள் நெருங்கி; பகல் இடைய -
கதிரவன் ஒளியும் மழுங்கும்படி; அட்டலில் மடுத்த -
மடைப்பள்ளியிலிருந்து கொண்டு வந்த; எரி - நெருப்பிலே; பரப்பும்
அகில் - பரப்பிய அகிற் கட்டைகளில்; இடு கொழும்புகை -
உண்டாகிய மிகுதியான புகை; அழுங்கலின் - நெருங்குவதால்;
முழங்கா - இடி இடிக்காத; முகில் - மேகங்கள்; படு நெடுங்கடலை -
தங்கிய பெரிய கடலை; அம் மூதூர் - (அவர்கள் தங்கிய) பழைய
நகர்; ஒத்துளது - ஒத்துள்ளது.
அகில்புகை மிகுதியாகத் தங்கிய அந்த இடத்திற்கு முகில்படுதல்
உவமையாயிற்று. அந்த இடத்தின் பரப்பும். அங்குள்ளவர் எழுப்பிய
அகிற் புகையின் மிகுதியும் வருணனையில் புலப்படும். 27
