வரைக்காட்சிப் படலம் - 926
மகளிர் திரிதல்
மகளிரும் மைந்தரும் திரியும் காட்சி
926.
வெயில் நிறம் குறையச் சோதி
மின் நிழல் பரப்ப. முன்னம்
துயில் உணர் செவ்வியோரும்.
துனி உறு முனிவினோரும்.
குயிலொடும் இனிது பேசி.
சிலம்பொடும் இனிது கூவி.
மயிலினம் திரிவ என்ன.
திரிந்தனர் - மகளிர் எல்லாம்.
முன்னம் துயில் உணர் - (விழித்தெழும் நேரத்திற்கு) சிறிது
முன்பே உறக்கம் நீங்கிய; செவ்வியோரும் - அழகு உடையவரும்;
துனி உறு முனிவினோரும் - நீண்ட ஊடலால் அமைந்த
கோபத்தையுடையவருமான; மகளிர் எல்லாம் - மங்கையர் யாவரும்;
குயிலொடும் இனிது பேசி - குயில்களோடு இனிமையாகப் பேசியும்;
சிலம்பொடும் இனிது கூவி - மலை எதிரொலிக்க நன்றாகக் கூவியும்;
வெயில் நிறம் குறைய - கதிரவன் ஒளி?யும் தமக்கு முன்னே ஒளி
மழுங்குமாறு; சோதி - அணிகலன்களின் ஒளி; மின்நிழல் பரப்ப -
மின்னலைப் போன்ற ஒளியைப் பரப்ப; மயில் இனம் திரிவ
என்ன - (கண்டவர்) மயில்களின் கூட்டம் திரிவன என்று
கருதுமாறு; திரிந்தனர் - திரிந்தார்கள்.
சிலம்போடு இனிது கூவி எதிரொலியுண்டாக்கி மகிழ்தல் மலைவாழ்
மகளிர்க்கு வழக்கமாகும். சிலம்பொடும் இனிது கூவி - தாம்
நடக்கும்போது ஒலிக்கின்ற சிலம்பு என்னும் அணியுடனே இனிதாக
ஒலி செய்து என்று கூறுவதுண்டு. 29
