வரைக்காட்சிப் படலம் - 927
ஆடவர் திரிதல்
927.
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப.
தார் இடை அளிகள் ஆர்ப்ப.
வாள் புடை இலங்க. செங் கேழ்
மணி அணி வலையம் மின்ன.
தோள் என உயர்ந்த குன்றின்
சூழல்கள் இனிது நோக்கி.
வாள் அரி திரிவ என்ன.
திரிந்தனர் - மைந்தர் எல்லாம்.
மைந்தர் எல்லாம் - வீரர்களான ஆடவர் யாவரும்; தாள் இணை
கழல்கள் ஆர்ப்ப - (தம்) இரண்டு அடிகளிலும் வீரக் கழல்கள்
ஆரவாரிக்கவும்; தார் இடை அளிகள் ஆர்ப்ப - (தாம் அணிந்த)
மலர் மாலைகளில் (தேனைப் பருகும்படி) வண்டும் ஆரவாரம் செய்து
மொய்க்கவும்; வாள்புடை இலங்க - வாளாயுதங்கள் இடையிலே
விளங்கவும்; செங்கேழ் மணி - செந்நிறமுள்ள இரத்தினங்கள்; அணி
வலயம் மின்ன - பதித்துச் செய்யப்பட்ட அழகிய தோள் வலயங்கள்
ஒளி விடவும்; தோள் என உயர்ந்த - (தம்) தோள்களைப் போல
உயர்ந்த; குன்றின் சூழல்கள் - அம் மலையின் சுற்றுப்பக்கங்களை;
இனிது நோக்கி- நன்றாகப் பார்த்தவண்ணம்; வாள் அரி திரிவ
என்ன - கொடிய சிங்கங்கள் திரிவன போல; திரிந்தனர் -
உலாவினார்கள்.
தோளென உயர்ந்த குன்று - எதிர் நிலையணி. ஆடவர் மலையின்
சுற்றுப் பக்கங்களைக் காணுமாறு சஞ்சரித்தனர் என்பது. 30
