வரைக்காட்சிப் படலம் - 930

bookmark

930.

பண் மலர் பவளச் செவ் வாய்ப்
   பனி மலர்க் குவளை அன்ன
கண் மலர்க் கொடிச்சிமார்க்குக்
   கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி.
   புதிய தேன் உதவும் நாகத்
தண் மலர் என்று. வானத்
   தாரகை தாவும் அன்றே!
 
பண்மலர்  பவளச்  செவ்வாய் - பண்ணிசை  தோற்றும்  பவளம்
போன்ற  செவ்வாயினையும்;  பனிக்குவளை மலர் அன்ன - குளிர்ந்த
குவளை   மலர்   போன்ற;   கண்  மலர்  -  கண்களையும்  பெற்ற
முகத்தாமரையையுடைய;     கொடிச்சிமார்க்கு    -    குறிஞ்சிநிலப்
பெண்களுக்கு;   கணித்   தொழில்   புரியும்-  சோதிடத்   தொழில்
புரிந்துவரும்; வேங்கை உண்மலர் - வேங்கை  மரத்தின் தேனையுண்ட
மலர்களின் மேல்; வெறுத்த தும்பி - வெறுப்புற்ற கருவண்டுகள்; புதிய
தேன் உதவும் - புதிய தேனைத் தருகின்ற; நாகம் தண் மலரென்று -
சுரபுன்னை   மலரென்று   கருதி;  வானத்  தாரகை  -  விண்ணிலே
விளங்குகின்ற நடசத்திரங்களின் மேல்; தாவும் - தாவுகின்றன. 

வேங்கை     நன்னாளில்  மலர்தலும்.  அந்த  நாளில் மலைமகளிர்
மணம்  புரிதலும்.  அது பூத்தபோது  மகளிர்  தினைப் புனங் கொய்யத்
தொடங்குதலும்    வழக்காதலின்    அவ்     வேங்கை    சோதிடரை
ஒப்பதாயிற்று.  ‘மலரின்  தேனைக்  குடித்ததால்  தேன்  நீங்கிய  அந்த
வேங்கை   மலரை  வெறுத்தது   தும்பி;  பின். வானத்திலே விளங்கும்
விண்மீன்களைக்   கண்டு  அவற்றைச்   சுரபுன்னை   மலராக  மயங்கி
அவற்றின்மேல்   தாவியது   என்றார்.   மயக்கவணியை   அங்கமாகக்
கொண்டு   வந்த   தொடர்புயர்வு   நவிற்சியணி.  கணி:   முகூர்த்தம்
அறிவிப்பவன்.                                              3