வரைக்காட்சிப் படலம் - 933
933.
உதி உறு துருத்தி ஊதும்
உலை உறு தீயும். வாயின்
அதி விட நீரும். நெய்யும்.
உண்கிலாது. ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர்
குறத்தியர் நுதலினோடு.
மதியினை வாங்கி. ஒப்புக்
காண்குவர். குறவர் மன்னோ!
உதி உறு துருத்தி - காற்று உண்டாக்கும் உலைத் துருத்தியால்;
ஊதும் உலை உறும் தீயும் - ஊதப்படும் கொல்லனது உலைக்களத்தில்
பொருந்திய நெருப்பையும்; வாயின் அதி விட நீரும் - ஆயுத
அலகிலே ஊட்டப்பெற்ற கொடிய நச்சு நீரையும்; நெய்யும்
உண்கிலாது - நெய்யையும் கொள்ளாமலே; ஆவி உண்ணும் -
(காதலித்த ஆடவரின்) உயிரைப் பறிக்கவல்ல; கொதி நுனை வேல்கண்
- கொதிக்கும் முனையுள்ள வேலைப் போன்ற கண்களையுடைய;
மாதர் குறத்தியர் நுதலினோடு - அழகிய மலை மகளிரின்
நெற்றியோடு; குறவர் மதியினை வாங்கி - குறவர்கள் (அம் மலை
மேல செல்லமுடியாத) சந்திரனை எடுத்து; ஒப்புக் காண்குவர் -
ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
குறவர்கள் அருகிலுள்ள பிறைச் சந்திரனைப் பிடித்துத் தம்
மனைவியரின் நெற்றியோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒற்றுமை
காண்பார்கள் என்பது - தொடர்புயர்வு நவிற்சியணி. வேலைக்
கூர்மைப்படுத்த கொல்லனது உலைக் களத்தில் காய்ச்சியடிக்கப்
பெறுகிறது. துருப்பிடியாமலிருக்க நெய் பூசப்படுகிறது. பகைவரது
உயிரைக் கொள்ள நஞ்சு தீற்றப்படுகிறது. இத்தகு இயல்புகளோடு
கூடிப் பகைவரது உயிரையுண்ணும் வேலைப் போல. இந்தக்
கண்ணாகிய வேல் எந்தச் செயலும் வேண்டாமல் ஆடவரது உயிரை
உண்ணவல்லதென்று வேறுபாடு காட்டியது - வேற்றுமையணி. 6
