வரைக்காட்சிப் படலம் - 934
934.
பேணுதற்கு அரிய கோலக்
குருளை. அம் பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழக்
கன்றொடு களிக்கும் முன்றில்.
கோணுதற்கு உரிய திங்கட்
குழவியும். குறவர்தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர்
மகவொடு. தவழும் மாதோ!
அம் பிடிகள் ஈன்ற - அழகிய பெண் யானைகள் பெற்றெடுத்த;
காணுதற்கு இனிய வேழக் கன்றொடு - காண்பதற்கு இனிய யானைக்
கன்றுகளோடு; முன்றில் பேணுதற்கு அரிய - (குடிசைகளின்)
முற்றகளிலே பேணி வளர்த்தற்கு அரிய; கோலக் குருளை களிக்கும் -
அழகிய சிங்கக் குட்டிகளும் மனமகிழ்ந்து விளையாடும்
(அல்லாமலும்); கோணுதற்கு உரிய - வளையும் தன்மை கொண்டுள்ள;
திங்கள் குழவியும் - இளஞ்சந்திரனும்; குறவர் தங்கள் வாள்நுதல் -
குறவர்களின் ஒளி பொருந்திய நெற்றியையுடைய; கொடிச்சி மாதர்
மகவொடு - (மனைவியரான) குறத்தியர் பெற்ற குழந்தைகளோடு;
தவழும் - தவழ்ந்து விளையாடும்.
யானைக் கன்றோடு சிங்கக் குருளைகள் களிக்கும் எனவும்.
இளஞ்சந்திரனும் குறத்தியர் குழந்தைகளோடு தவழும் எனவும்
கூறினார். நிலத்தின் தன்மையால் இயற்கைப் பகையாயினவும் அப்
பகைமை ஒழிந்து நட்புப் பூண்டு ஒழுகின என்பதை உணரலாம்.
கோலக் குருளை: அழகிய சிங்கக்குட்டி. 7
