வரைக்காட்சிப் படலம் - 937
937.
கள் அவிழ் கோதை மாதர்.
காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாள்-கண்ணினார்தம்
குங்குமக் குழம்பு தங்கும்
தெள்ளிய பளிக்குப் பாறைத்
தெளி சுனை. மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன.
வரம்பு இல பொலியும் மன்னோ!
காதொடும் - மகளிர் தம் அழகிய காதுகளோடு; உறவு செய்யும் -
உறவு கொள்ளுகின்ற; கொள்ளை வாள் கண்ணினார்தம் - (ஆடவர்
உயிரைக்) கவரவல்ல வாள் போன்ற கண்களையுடைய மகளிர்
அணிந்த; கள் அவிழ் கோதை - தேன் சொரியும் மலர்
மாலையணிந்த; மாதர்தம் - மகளிர் தம்; குங்குமக் குழம்பு தங்கும் -
குங்குமச் சேறு தங்கிய; தெள்ளிய பளிங்குப் பாறை - தெளிந்த
நிறத்தையுடைய பளிங்குப் பாறையினால் இயன்ற; தெளிசுனை வரம்பு
இல - தெளிந்த சுனைகள் மிகப் பல; மணியில் செய்த வள்ளமும் -
செம்மணியால் இயன்ற கிண்ணங்களும்; நறவும் என்ன - கள்ளும்
போல; பொலியும் - விளங்குகின்றன.
குங்குமக் குழம்பை அப்பிய மாதர் நீராடுவதனால் பளிங்குச்
சுனையில் குங்குமக் குழம்பு தங்கும் என்பது. அதனால் அப்
பளிங்குப் பாறை செம்மணி போல் தோன்ற. அக் குங்குமம் கலந்த நீர்
நறவு போலத் தோன்றும் என்பது புலனாகும்-தற்குறிப்பேற்ற அணி. 10
