வரைக்காட்சிப் படலம் - 938
938.
ஆடவர் ஆவி சோர.
அஞ்சன வாரி சோர.
ஊடலின் சிவந்த நாட்டத்து
உம்பர்தம் அரம்பை மாதர்.
தோடு அவிழ் கோதைநின்றும்
துறந்த மந்தார மாலை.
வாடல. நறவு அறாத.
வயின் வயின் வயங்கும் மாதோ!
ஆடவர் ஆவி சோர - (தம்) கணவரின் உயிர் வருந்தித்
தளரும்படி; அஞ்சனம் வாரி சோர - (தீட்டிய) மையுடன் கண்ணீர்
பெருகுமாறு; ஊடலில் சிவந்த நாட்டத்து - புலவியால் செந்நிறம்
அடைந்த கண்களையுடைய; உம்பர்தம் அரம்பை மாதர் -
தேவர்களின் மனைவியர்; கோதை நின்றும் துறந்த - தம்
முடிகளிலிருந்து கழற்றி எறிந்த; தோடு அவிழ் மந்தார மாலை - இதழ்
விரிந்த மந்தார மாலைகள்; வாடல நறவு அறாது - வாடாதனவாகித்
தேனும் நீங்காமல்; வயின் வயின் வயங்கம் - அந்தந்த இடங்களிலே
விளங்கும்.
ஊடல் கொண்ட தேவ மாதர் தம் கணர் வருந்துமாறு சிவந்த
கண்களில் கண்ணீரைப் பெருக்கிக் கழற்றியெறிந்த மந்தார மாலைகள்
அம் மலையின் பல இடங்களிலும் காணப்படும் என்பது. தெய்வ
மாலையாதலின் வாடாமலும். நறவு அறாமலும் இருந்தன. 11
