வரைக்காட்சிப் படலம் - 939

bookmark

939.

மாந் தளிர் அனைய மேனிக்
   குறத்தியர் மாலை சூட்டி.
கூந்தல் அம் கமுகின் பாளை
   குழலினோடு ஒப்புக் காண்பார்;
ஏந்து இழை அரம்பை மாதர்
   எரி மணிக் கடகம் வாங்கி.
காந்தள் அம் போதில் பெய்து.
   கைகளோடு ஒப்புக் காண்பார்.
 
மாந் தளிர் அனைய- மாந் தளிரைப் போன்ற; மேனிக் குறத்தியர்
-  உடல்  நிறம்  கொண்ட  குறப்  பெண்கள்;  மாலை சூட்டி - மலர்
மாலைகளை அணிவித்து;  (பின்பு) கூந்தல் கமுகின் பாளை - கூந்தற்
கமுகின்   பாளைகளை;  குழலினோடு  ஒப்புக்  காண்பார்  -  (தம்)
கூந்தலோடு  வைத்து ஒப்பிட்டுக் காண்பார்கள்; ஏந்து இழை அரம்பை
மாதர்  -  அழகிய  அணிகலன் பூண்ட தெய்வ மாதர்கள்; எரி மணிக்
கடகம்  வாங்கி  -  நெருப்புப் போல ஒளிவிடும் மணிக் கடகங்களைக்
கழற்றி;  காந்தள் போதில்  பெய்து - காந்தள் மலர்களிலே அவற்றை
யணிந்து; கைகளோடு  ஒப்புக் காண்பார் - (தம்) கைகளோடு உவமை
காண்பார்கள்.

குறத்தியர்      கூந்தற்     கமுகின்      பாளைகளிலே     மலர்
மாலையையணிவித்து   அவை   தமது    கூந்தலோடு    ஒப்பாவதைக்
கண்டனர்.     தெய்வ     மகளிர்    தம்    கடகத்தை     வாங்கிக்
காந்தளிலேயணிந்து  அம்  மலர் தம்  கைக்கு  ஒப்பாவதைக் காண்பார்
என்பது.  மண்ணுலகத்தவரும்.  விண்ணுலகத்தவரும்  மகிழ்வதற்கு  அம்
மலை இடனாயுள்ளது என்றார்.                                12