தனி – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

940

ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்

அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்

தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்

மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்

கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.

6.96.1

941

முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார்

முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்

செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்

சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்

அடியேனை ஆளுடைய அடிக ளாரே.

6.96.2

942

முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு

மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப

அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்

மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்

சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.

6.96.3

943

பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்

பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்

அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்

கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்

செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.

6.96.4

944

அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்

அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்

சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்

மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்

சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.

6.96.5

945

பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்

பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்

நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மைய லாகி

வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்
ஊரடங்க ஒற்றிநகர் பற்றிக் கொண்டார்

உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

6.96.6

946

அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்

ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்

காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்

மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்

சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.

6.96.7

947

படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்

பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்

கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்

நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே

என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே.

6.96.8

948

எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்

இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார்

விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து
உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்

உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்

அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.

6.96.9

949

சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்

சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்

உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்

காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்

வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

6.96.10

950

குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்

குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்

தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்

பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்

இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

6.96.11

திருச்சிற்றம்பலம்