அ.தட்சிணாமூர்த்தி

bookmark

பிறப்பும் கல்வியும்:

தட்சிணாமூர்த்தி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள நெடுவாக்கோட்டை என்னும் சிற்றூரில் மிக எளிய உழவர் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அய்யாசாமி, தாய் இராசம்மாள். மூன்று மூத்த சகோதரிகளோடு குடும்பத்தில் கடைசி மகனாகப் பிறந்தவர். பள்ளிப்படிப்பை மன்னார்குடி பின்லே பள்ளியில் முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி. ஏ. (ஆனர்ஸ்) -தமிழ்மொழியும் இலக்கியமும் (1961),பி.எட்.,தமிழ்மொழியும் சமூகவியலும் (1962) பயின்றார். சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.பில் பட்டமும் - ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை (1978-79), முனைவர் பட்டமும் - சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் (1988) பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர்கள் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தண்டபாணி தேசிகர் ஆகியோரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணி:

33 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகவும் பேராசிரியராகவும் பல கல்வி நிலையங்களில் பணியாற்றினார். திருவாரூர் பள்ளி, மயிலாடுதுறை ஏ வி.சி கல்லூரி, பூண்டி புட்பம் கல்லூரி ஆகியவற்றில் பணி செய்தார். பாண்டித்துரைத்தேவர் அமைத்த நான்காம் தமிழ்ச் சங்கம் ஆகிய மதுரைத்தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகப் 1991 - இல் பொறுப்பேற்றார். நிதியின்மையால் பொலிவிழந்திருந்த சங்கத்தை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டார். பல வளர்ச்சித் திட்டங்களை வகுத்து தமிழக அரசிடம் நிதிக்கோரிக்கை வைத்தார். 1996 - இல் பணி ஓய்வு பெற்ற நிலையில் அம்முயற்சியில் வெற்றியும் கொண்டார். பணி ஓய்வுக்குப்பின் தஞ்சை நகரத்தில் வாழ்ந்து வருகிறார்.

நூலாசிரியர்:

1973 ஆம் ஆண்டில் தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்னும் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டார். தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டுக்கூறுகள் ஒவ்வொன்றும் காலப்போக்கில் வளர்ந்த வரலாற்றை ஒரே நூலில் தொடர்ச்சியாக விளக்கும் இந்த அரிய நூல் அவரைத் தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டியது. இந்நூல் இன்றுவரை ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ்ப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்படுகிறது. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள், தமிழியற் சிந்தனைகள் போன்ற ஆய்வு நூல்களையும் சங்க இலக்கியங்களாகிய ஐங்குருநூறு, பரிபாடல் ஆகியவற்றின் உரைகளையும் எழுதியுள்ளார்.

மொழி பெயர்ப்பாளர்:

1999 - 2012 காலகட்டத்தில் 19 பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் முழுமையாக மொழியாக்கம் செய்தார். அவற்றில் 13 சங்க இலக்கிய நூல்களும் 6 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். இவர் பெருநூலான அகநாநூற்றை முதன் முதலில் முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை 1999-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஆறு நூல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தந்துள்ளார். குறுந்தொகையின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்து 31 ஆண்டுகளுக்குப்பிறகு வெளிவந்த இரண்டாவது முழு மொழிபெயர்ப்பு இவருடையதாகும். இது 2012 -ஆம் ஆண்டிற்கான நல்லி திசையெட்டும் விருது பெற்றது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகம், 2001 -ஆம் ஆண்டு வெளியிட்ட இவருடை நற்றிணையின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலத்துக்கு நெருக்கமான முதல் முழுபெயர்ப்பாகக் கருதப்படுகிறது. இவரது பத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பு, முதல் மொழிபெயர்ப்பு வெளிவந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த இரண்டாவது முழு மொழிபெயர்ப்பாகும். பாரதியாரின் பாரதி அறுபத்தாறு, பாரதிதாசனின் புரட்சிக்கவி, சஞ்சீவிபருவதத்தின் சாரல், புரட்சிக்கவி, தமிழச்சியின் கத்தி, நல்ல தீர்ப்பு, கடல்மேல் குமிழிகள் ஆகிய அண்மைக்கால படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இடைக்கால இலக்கியங்களான அபிராமி அந்தாதி, நீதி வெண்பா, பெருமாள் திருமொழி ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அ. ச. ஞானசம்பந்தன் என்னும் அறிஞரின் கம்பன் - புதிய பார்வை என்னும் நூலை இவர் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்து 2013 இல் சாகித்திய அகாதமி வெளியிட்டது.

எழுதிய தமிழ் நூல்கள்:

  • தமிழர் நாகரிகமும் பண்பாடும் (1973)

  • சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் (2001)

  • தமிழியற் சிந்தனைகள் (2003)

  • சங்க இலக்கியம்-ஐங்குறுநூறு (இரண்டு மடலங்கள்) (2004)

  • பரிபாடல் மூலமும் உரையும் (2004)

  • சிறப்புகளும் விருதுகளும்

  • பாரதிதாசன் நூலாசிரியர் சான்றிதழ் - தமிழ்நாடு அரசு (1991)

  • பாரதிதாசன் விருது - தமிழ்நாடு அரசு (2003)

  • வள்ளல் பாண்டித்துரை தேவர் விருது - இராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் (2003)

  • திரு.வி.க விருது தஞ்சை தமிழிசை அகாதமி (2012)

  • நல்லி திசை எட்டும் விருது, சென்னை (2012)

  • கலைஞர் பொற்கிழி விருது - உலகப் புத்தக நாள் விழா (2013)

  • செம்மொழி குறள் விருது (2014)

  • சாதனைத் தமிழர் விருது - கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம், கொல்கத்தா (2014)

  • இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது (2015).