அண்ணல் தங்கோ

bookmark

வாழ்க்கை:

இராமநாதபுர மாவட்டம், கண்டவராயன்பட்டியில் இல. முருகப்பனார் - மாணிக்கம்மாள் இணையருக்கு முதல் மகனாக 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள் திங்கட் கிழமையன்று கு.மு. அண்ணல்தங்கோ பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘சுவாமிநாதன்’. தொடக்கக்கல்வி மட்டுமே படித்த இவர், தனது சுயமுயற்சியால் தமிழ் மற்றும் பலமொழிகளில் புலமை பெற்றார்.

இளமை பருவம்:

அண்ணல்தங்கோவின் ஏழாவது அகவையிலேயே அவர்தம் தந்தையார் காலமாகிவிட்டதால், அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. அவரின் அன்னை, அவரை உயர்ந்த நிலைக்கு ஆளாக்க வேண்டுமென இலட்சியத்தோடு வளர்த்தார். சந்தையில் காய்கறி, கீரை கடை வைத்து, அதில் வரும் வருவாயில் குடும்பம் நடத்த வேண்டிய நெருக்கடி நிலை. இதனால் அண்ணல்தங்கோ முறையாக பள்ளிசென்று கல்வி கற்கும் வாய்ப்பை அறவே இழந்தார். இதனை அவரது மணிவிழா மலரில் குறிப்பிடும் போது, ‘எனதருமைத் தந்தையார் நோய்வாய்ப்பட்டு – மூன்றாண்டு கிடந்து இறந்துவிட்டார். எனவே எனது கல்விச்செல்வம் (கல்விகற்கும் வாய்ப்பு) அகர முதல் னகர ஒற்றீராகியது’- என தான் பள்ளிக்குச் சென்று கல்வி பயிலவில்லையே என வருத்தமாகக் கூறுகிறார். பள்ளிசென்று கற்கும் வாய்ப்பு கிட்டாவிடினும், இளமைக்காலந்தொட்டே, தம் முயற்சியினால் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் மொழிகளில் புலமைபெறுமளவிற்குத் திகழ்ந்தார். குடும்ப வறுமையின் காரணமாக, அவர் நெசவுத்தொழிலில் நன்கு கைதேர்ந்தவராதல், நெசவுத்தொழில் செய்து குடும்பத்தில் இரு சகோதரர்களையும் படிக்க வைக்கலாம் எனும் நோக்கில், அவர் கண்டவிராயன்பட்டியிலிருந்து கைத்தறி தொழிலில் முன்னணி நகரமான குடியேற்றத்திற்கு குடிபெயர்ந்தார். அதனாலேயே ‘குடியேற்றம்’ எனும் ஊர் பெயர் முதலெழுத்தான‘கு’ வை இணைத்து ‘கு.மு. அண்ணல்தங்கோ’ எனக் குறிப்பிட்டுப் பேசி பழகி வந்ததால், அவர் அப்பெயரிலேயே அழைக்கபடலானார். அண்ணல்தங்கோவுடன் நடேசன், இராமசந்திரன், பெருமாள் என்ற 3 தம்பிகளும், அரங்கநாயகி எனும் தங்கையும் பிறந்தார்கள். இளமைப்பருவம் முதலே அண்ணல்தங்கோ தமிழின உணர்வாளராகவும் நாட்டுப் பற்றுமிக்கவராகவும் பொதுநலப்பணி உணர்வினராகவும் செயற்பட்டார்.

போராட்டங்கள் மற்றும் சிறை :

இவர் 1918ல் காங்கிரசில் சேர்ந்தார். 1923ல் கள்ளுக்கடை மறியல், 1925ல் வைக்கம் போராட்டம், 1927ல் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930ல் உப்புசத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்று 5 முறை சிறை சென்றார்.

திராவிடர் கழகத்திற்கு ‘தமிழர் கழகம்’ எனப் பெயரிடப் போராட்டம்:

1936ல் காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார். 1944ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் ‘தமிழர் கழகம்’என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினார். 1940இல் திருவாரூரில் தென்னிந்திய சங்க உரிமை மாநாடு நடந்தது. அதில் 1941இல் நடக்கவிருக்கும் குடிமதிப்புக் கணக்கெடுப்பின் போது, ‘தென்னாட்டு மக்கள் தம்மைத் தமிழர் எனவும், தமிழக மக்கள் எனவும்’ குறித்துக் கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டு வர முயன்றார் அண்ணல்தங்கோ.

உலகத்தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை:

வேலூரில் 1937ல் உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வேலூரில் கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும் சான்றோர்களையும் கலந்துகொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார். 1937 மற்றும் 1938ல் தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார்.

திருமண வாழ்க்கை :

தமிழின வரலாற்றிலேயே 1927இல் முதன்முதலாக பதிவு செய்யத்தக்க வேண்டிய, அண்ணல்தங்கோ அவர்கள் தமது திருமணத்தை தாமே தமிழ்மொழியில் நடத்தி, திருக்குறளை முன்மொழிந்து, சிவமணி அம்மாளை புரோகித மறுப்பாக தமிழ்த்திருமணம் செய்துகொண்டார். தமிழ்த் திருமணமாக, வாழ்க்கை துணைவியாக்கிக் கொண்ட நிகழ்வு – தமிழக வரலாற்றில் முதல் புரோகித மறுப்புத் திருமணமாகும். 1927ஆம் ஆண்டு காலக்கட்டதிலேயே கு.மு. அண்ணல்தங்கோ அந்த பெருமைக்குரியவராகிறார்.

தமிழ் நிலம் இதழ்:

1942ல் ‘தமிழ் நிலம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

நாட்டுடமையாக்கம்:

கு.மு.அண்ணல்தங்கோவை கெளரவிக்கும் வகையில் அவருடைய படைப்புக்களை நாட்டுடமை ஆக்கினார் முதல்வர் கருணாநிதி.

படைப்புகள்:

நடிகர் சிவாஜிகணேசனைத் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ படத்திலும், ‘பெற்றமனம்’, ‘பசியின் கொடுமை’, ‘கோமதியின் காதலன்’ ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்கும் வகையில் பல நூல்களை எழுதியுள்ளார்.

கு.மு. அண்ணல்தங்கோ எழுதிய நூல்கள்:


 

  • அறிவுப்பா (அ) என் உள்ளக் கிழவி சொல்லிய சொல்

  • தமிழ்மகள் தந்த செய்தி (அ) சிறையில் யான் கண்ட கனவு

  • அண்ணல் முத்தம்மாள் பாட்டு (தமிழர் எழுச்சிக்கான

  • தீண்டாமையை எதிர்த்து போர் முரசுப் பாடல்)

  • மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?

  • நூற்றுக்கு நூறு வெற்றிக் காங்கிரசு வெற்றித் தமிழ்மறவர்

  • தேர்தல் போர் முரசுப் பாடல்கள்

  • முருகன் தந்த தேன் கனிகள்

  • மறைவு:

    வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும் தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட கு.மு.அண்ணல்தங்கோ சனவரி 4, 1974ல் தேதி இறந்தார்.