இஞ்சி

இஞ்சி

bookmark

தாவர இயல் பெயர்: Zingiber officinale Rose/ Zingiberaceae

இதன் மறு பெயர்கள்: அத்ரகம், ஷந்தி ஆகிய இவை இரண்டும் இஞ்சியின் ஆயுர்வேதப் பெயர்கள். இது தவிர அல்லம், ஆர்த்தரகம், ஆத்திரகம், இலாக் கொட்டை போன்ற பல பெயர்களில் இந்த இஞ்சி அழைக்கப்படுகிறது.

வளரும் இடங்கள்: இஞ்சி பொதுவாக ஆசியாவை சார்ந்தது என்று கருதப்படுகிறது. காய கல்ப மருந்துகளில் ஒன்று எனக் கூறப்படும் இஞ்சியை இந்தியாவின் பல இடங்களிலும் காணலாம்.

பயன் தரும் பகுதிகள்: தரையடித் தண்டு

பொதுவான தகவல்கள் : இஞ்சி வேர் என்ற தமிழ்ப் பெயரில் இருந்து தான் "ஜிஞ்ஜர்" என்ற ஆங்கிலப் பெயர் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இஞ்சி (Zingiber officinale) உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.

மனிதர்களுக்கு நோய்களால் உண்டாகும் அல்லல்களை தீர்ப்பதால் இஞ்சிக்கு அல்லம் என்ற ஒரு பெயரும் உண்டு. இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று என்றும் சிலர் கருத்துக் கூறுவார்கள்.

இஞ்சியை தொடர்ந்து உண்டால் பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் போன்ற பல நோய்கள் தீரும்.

இஞ்சியின் பொதுக் குணம்:-

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம் பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்த வாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது இந்த இஞ்சி.

இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும்.

இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.

கடுமையான கார ருசி உடையது இஞ்சி.

இஞ்சிச் சொரசம் :-

நன்றாகப் பருத்த இஞ்சியின் தோலைச் சீவி அதை மெல்லிய பில்லைகளாக நறுக்கி, அதில் 24 கிராம் எடை அளவு எடுத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டு 5 கிராம் எடையளவு இந்துப்பைத் தூள் செய்து அதில் போட்டு நன்றாக கலக்கி மூன்று நாட்கள் மூடி வைத்திருந்து பிறகு தினசரி இஞ்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து ஒரு சுத்தமான தட்டில் பரப்பி தூசு எதுவும் விழாதபடி மெல்லிய துணியால் மூடி வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். மாலையில் காய்ந்த துண்டுகளை மீண்டும் மீதமுள்ள இந்துப்பு கலந்த எலுமிச்சைச் சாற்றில் போட்டு காலை வரை ஊற வைத்து மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்விதமாக இஞ்சி எலுமிச்ச சாற்றை முழுவதுமாக உறிஞ்சிய பின் நன்கு சுக்கு போல காய விட்டு எடுத்து ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு வைத்து கொள்ள வேண்டும். இதுவே இஞ்சிச் சொரசம் எனப்படும். வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும்.

பழம்பாடல் கூறும் இஞ்சியின் பெருமை:-

" காலையில் இஞ்சி,

கடும்பகல் சுக்கு,

மாலையில் கடுக்காய்

மண்டலம் சாப்பிட

கோலூன்றி நடந்தவன் கோலைவீசி

நடப்பான் மிடுக்காய்"

பொருள் : காலையில் இஞ்சி சாறுடன் தேன் கலந்தும், மதிய உணவுக்குப் பின் சுக்கு, கருப்பட்டி கலந்தும் (அதாவது சுக்கு கசாயமும்), மாலையில் (இரவு உணவுக்கு பின்) கடுக்காய் சூரணம் என 48 நாட்கள் (மண்டலம்) சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கலாம். கோலூன்றி நடந்தவன் கூட மிடுக்காய் கோலை வீசி நடப்பான்.

தமிழக சமையல்களில் தொன்று தொட்டு இடம் பிடித்த இஞ்சி:-

இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கஷாயம் என்று தமிழர்கள் பல வகைகளில் இஞ்சியை சமைத்து மகிழ்கின்றனர்.

சுக்கு:-

உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இது ஓராண்டுப் பயிராகும்.

இஞ்சியின் இதர மருத்துவப் பயன்கள்:

* இஞ்சித் துவையல் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

* இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

* இஞ்சி டீ குடிக்க சளித் தொல்லை உண்டாகாது.

* காது சம்மந்தமாக எந்த நோயும் ஏற்படாமல் இருக்க இஞ்சிப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

* இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.

* இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பைல் சுரப்பை தூண்டி, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்தைக் காண தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

* இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான் சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மில்லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு, வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர, வாத நோய் குணமாகும்.

* நோயெதிர்ப்பு சக்தியின்றி இருப்பவர்கள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

* தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

* ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக நுரையீரலினுள் செல்லும் இரத்த நாளங்கள் நன்கு ரிலாக்ஸ் அடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, சுவாச பிரச்சனைகள் நீங்கும். இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள Food poison வராது.

* நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணமும் உண்டு.

* இஞ்சிக்கு பெண்களின் கருப்பையில் ஏற்படும் புற்று நோயை வராமல் தடுக்கும் தன்மை உண்டு.

* மோருடன் இஞ்சி, சீரகம், சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* இஞ்சிச் சாறில் சிறிதளவு வெல்லம் போட்டுக் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

* இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

* இஞ்சிச் சாறும் தேனும் கூட்டி அதிகாலையில் தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். இதய நோய்கள் தீரும்.

* நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சிச் சாறுடன் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்தால் இஞ்சி ஜூஸ் ரெடி. இதைக் குடித்தால், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, சளி போன்ற வியாதிகள் குணமாகும்.

* பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் ரத்த உறைதலை இஞ்சி தடுக்கிறது. அத்துடன் தினம் ஒரு சிறு நெல்லிக்கனி அளவு இஞ்சி உண்டால் இதயத்திற்கும் அது பாதுகாப்பு அளிக்கிறது.

* ஓமத்துடன் இஞ்சி வைத்து அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

* தொண்டைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது இந்த இஞ்சி.

* இஞ்சி சாறில் ஆமணக்கெண்ணை கலந்து குடிக்க மலச்சிக்கல் தீரும்.

* குழந்தைகளுக்கு வரும் இருமலைக் கட்டுப்படுத்த பாலுடன், இஞ்சிச் சாற்றைக் கலந்து சூடு செய்தும் கொடுக்கலாம்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.

* இஞ்சி, வலிப்பு நோயைக் கூட குணப்படுத்தும் என்று சமீப ஆய்வுகள் தெரிவிக்கிறது.

* காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

* பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

* இஞ்சியுடன் சிறிது ஓமம் வைத்து அரைத்து சிறிது தேன் கலந்து சாப்பிட புளியேப்பம் மாறிவிடும்.

* இஞ்சியில் இருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகிய மருந்துப் பொருள்கள், உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியும் தரக்கூடியவை.

* இஞ்சித் துண்டை பல்வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்த்தால் வலி மட்டுப்படும்.

* இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

* இஞ்சியை, தேனுடன் கலந்து தினமும் காலையில் சிறிதளவு உண்டு வர தொந்தி குறையும்.

* இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

* இஞ்சிச் சாறு ரத்தத்தை சுத்திகரிக்கும். இதனால் தோல் நோய் தீரும். மந்தம் போகும்.

* இஞ்சி சாறுக்கு தலைவலியை போக்கும் தன்மையும் உண்டு.

* இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

* இஞ்சிச் சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து, வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.

* ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.

* இஞ்சிச் சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, தேவையானபோது 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி முதலியவை குணமடையும்.

* மூக்கில், ஓரிரு சொட்டுகள் இஞ்சிச் சாறு விட்டால் தலைவலி குணமாகிவிடும்.

* இஞ்சி ஜூஸை தினமும் அருந்துபவர்களுக்கு, நாக்கு மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படாது.

* அதிகாலை நேரத்தில் இஞ்சிச் சாறுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் பித்த மயக்கம் தீரும்.