கார்முகப் படலம் - 751
சனகன் பணியாளரை ஏவ அவர்கள் விற்சாலையை
அணுகல்
ஏவலர் வில்லினை அவைக்குக் கொண்டுவரல்
751.
என்றனன். ஏன்று. தன்
எதிர் நின்றாரை. ‘அக்
குன்று உறழ் வரி சிலை
கொணர்மின். ஈண்டு’ என.
‘நன்று’ என வணங்கினர்.
நால்வர் ஓடினர்;
பொன் திணி கார்முகச்
சாலை புக்கனர்.
என்றனன் - என்று கூறிய சனகன்; ஏன்று - தன் கட்டளையை
ஏற்று; எதிர் நின்றாரை- தனக்கு எதிரே நின்ற ஏவலாட்களை நோக்கி;
குன்று உறழ் வரிசிலை - மலையைப் போன்ற அக்கட்டமைந்த (சிவ)
வில்லை; ஈண்டு கொணர்மின்என - இங்கே கொண்டு வாருங்கள்
என்று ஆணையிட; நால்வர் - அவர்களுள் நான்கு பேர்; நன்று என
வணங்கினர் - நல்லது என்று கூறி வணங்கிவிட்டு; ஓடினர் -
விரைவாகச் சென்று; பொன்திணி - பொன் இழைத்த; கார்முகச் சாலை
- அந்த வில் வைக்கப்பட்டுள்ள இடம்; புக்கனர் - சென்றார்கள்.
சிவதனுசை அச் சிறுவர்க்குக் காட்டுமாறு அதனை அங்கே கொண்டு
வரச் சனகன் ஏலாட்களுக்குக் கட்டளையிட்டான்; அதனை மேற்கொண்ட
சிலர் அவ் வில் வைத்திருக்குமிடம் சென்றார்கள். நன்று - அரசனது
பணியை ஏற்று ஏவலாளர் கூறும் ஒரு மரியாதைச் சொல். 2
