கார்முகப் படலம் - 752
சிவதனுசைப் பலர் சுமந்து வருதல்
752.
உறுவலி யானையை ஒத்த மேனியர்.
செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்.
அறுபதினாயிரர். அளவு இல் ஆற்றலர்.
தறி மடுத்து. இடையிடை. தண்டில் தாங்கினர்.*
(விற்சாலையுள் புகுந்த ஏவலாளர் தெரிவித்தவாறு) உறுவலி
யானையை- மிக்க வலிமையுடைய யானையை; ஒத்த மேனியர் -
ஒத்த திடமான உடலையுடையவர்களும்; கல் எனத் திரண்ட - மலை
போலத் திரண்டு; மயிர் செறி தோளினர் - மயிர் அடர்ந்த
தோளினரும்; அளவு இல் ஆற்றலர் - அளவிடமுடியாத
வல்லமையுடையவர்களுமாகிய; அறுபதினாயிரர் - அறுபதினாயிரம்
வீரர்கள்; இடை இடை - (அந்த வில்லின்) நடு இடங்களில்; தறி
மடுத்து - தூண்களை வைத்து; தூண்டில் - (அத் தூண்களோடு
நெடுகக் கட்டிய) தண்டுகளில்; தாங்கினர் - (தம் தோள்களில் வைத்து
சுமந்து வந்தார்கள். 3
