கார்முகப் படலம் - 761
761.
‘இமைய வில் வாங்கிய ஈசன். “பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன” ஓங்கிய
கமை அறு சினத்தன் இக் கார்முகம் கொளா.
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.
இமையவில்- மேருமலையை வில்லாக; வாங்கிய ஈசன்- வளைத்த
சிவன்; பங்கு உறை - (தன்) இடப்பக்கத்திலே வாழும்; உமையினை-
உமா தேவியை; இகழ்ந்தனன் என்ன - (தந்தையான தக்கன்)
அவமதித்தான் என்ற காரணத்தால்; ஓங்கிய - பொங்கியெழுந்த; கமை
அறுசினத்தன் - பொறுமையற்ற சினத்தை யுடையவனாய்; இக்
கார்முகம் கொளா - இந்த வில்லை எடுத்துக்கொண்டு; சமை உறு-
நடந்து கொண்டிருக்கின்ற; தக்கனார் வேள்வி - தக்கனது யாக
சாலையை; சார - (நோக்கிச்) சேர.
மந்தரம். இமயம். கைலாயம் என்பவற்றை மேருவுடன்
வேறுபாடின்றிக் கூறுவது நூல் வழக்காகும். ‘இமயவில் வாங்கிய
ஈர்ஞ்சடை அந்தணன்’ - கலித். 3. 12
