கார்முகப் படலம் - 763

bookmark

763.    

‘தாளுடை வரி சிலை. சம்பு. உம்பர்தம்
நாள் உடைமையின். அவர் நடுக்கம் நோக்கி. இக்
கோளுடை விடை அனான் குலத்துள் தோன்றிய
வாளுடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான்.
  
சம்பு    - (தன் சினம் மாறிய) சிவன்; அவர் நடுக்கம் நோக்கி -
தேவர்கள்  அஞ்சி   நடுங்குவதைப்  பார்த்து;  உம்பர்தம்  நாள்  -
அத்தேவர்கள் வாழ்நாட்கள்; உடைமையின் - நீண்டு  இருந்தமையால்;
தாள்உடை  -  வலிய அடித்தண்டையுடைய; வரிசிலை - கட்டமைந்த
அவ்வில்லை; இக்கோள்  உடை - வலிமையுடைய; விடை அனான் -
இந்தக்  காளை போன்ற சனகனது; குலத்துள் தோன்றிய - குலத்திலே
பிறந்த; வாள் உடை உழவன் - வாளாகிய ஏர் கொண்டு உழுபவனான;
ஓர் மன்னன்பால் - ஓர் அரசனிடத்தில்; வைத்தான் - கொடுத்தான்.  

சிவன்     அந்த   வில்லைத் தேவராதனிடம் கொடுத்து வைத்தான்.
‘வில்லேர்   உழவர்’  என்றாற்போல  ‘வாளுடை   உழவன்’  என்றார்.
‘வாளேருழவன்’  - புற. 368.  ‘வில்லேர் உழவர்’ ‘சொல்லேர் உழவர்’ -
திருக். 882.                                                14