குலமுறை கிளத்து படலம் - 738
வேள்விக் குண்டத்தில் பூதம் தோன்றுதல்
738.
‘காதலரைத் தரும் வேள்விக்கு
உரிய எலாம் கடிது அமைப்ப.
மா தவரில் பெரியோனும்.
மற்றதனை முற்றுவித்தான்;
சோதி மணிப் பொற் கலத்துச்
சுதை அனைய வெண் சோறு ஓர்
பூதகணத்து அரசு ஏந்தி.
அனல்நின்றும் போந்ததால்.
காதலரைத் தரும்- (அவ்வாறே மாமன்னரும்) மைந்தர்களைக்
கொடுத்திடும்; வேள்விக்கு உரிய எலாம் - பெரிய வேள்விக்கு உரிய
பொருள்கள் எல்லாவற்றையும்; கடிது அமைப்ப - விரைவாகக்
கொண்டுவந்து சேர்க்க; மற்று - பின்னர்; மாதவரில் பெரியோனும்-
பெருந் தவமுடைய முனிவர்களில் சிறந்த கலைக்கோட்டு முனிவனும்;
அதனை முற்றுவித்தான் - அந்த வேள்வியைச் செய்து முடித்தான்;
அனல் நின்றும் - அந்த ஓம நெருப்பிலிருந்தும்; ஓர் பூத கணத்து
அரசு - பூதக் கூட்டங்களுக்குத் தலைவனான சிறந்த ஒரு பூதமானது;
சோதி மணி - ஒளிமிக்க அழகிய; பொன்கலத்து - பொன்தட்டிலே;
சுதை அனைய வெண்சோறு - அமுதம் போன்ற வெண்ணிறமான
பயசத்தை; ஏந்தி - எடுத்துக் கொண்டு; போந்தது - வெளிப்பட்டது.18
