குலமுறை கிளத்து படலம் - 742

bookmark

சுமித்திரை இலக்குமண சத்துருக்கனரைப் பெறுதல்

742.    

‘அரு வலிய திறலினர் ஆய்.
   அறம் கெடுக்கும் விறல் அரக்கர்
வெருவரு திண் திறலார்கள்.
   வில் ஏந்தும் எனில் செம் பொன்
பரு வரையும். நெடு வெள்ளிப்
   பருப்பதமும் போல்வார்கள்.
இருவரையும். இவ் இருவர்க்கு
   இளையாளும் ஈன்று எடுத்தாள்.
 
அரு    வலிய-  (பிறரால் வெல்லுதற்கு)  அரிய   வலிமையுடைய;
திறலினர்   ஆய்  -  வெற்றியுடையவர்களாய்;  அறம்  கெடுக்கும்-
தருமத்தை   அழிக்கின்ற; விறல்   -   வன்மைமிக்க;   அரக்கர்  -
இராக்கதர்கள்   எல்லோரும்;   வெருவரு   -   அஞ்சத்தக்க;  திண்
திறலார்கள்- மிக்க வலிமையுடையவர்களும்; செம்பொன் பருவரையும்
-  சிவந்த  பொன்மயமான  பெரிய  மேரு  மலையும்; நெடுவெள்ளிப்
பருப்பதமும்  -  வெள்ளிமயமான  உயர்ந்த கைலாய  மலையும்; வில்
ஏந்தும்   எனின்   -   (கையில்   தனித்தனியே)  வில்லை  எடுத்து
நிற்குமாயின்;   போல்வார்கள்   -   (அவற்றை)  ஒப்பவர்களுமாகிய;
இருவரையும்  -  (இலக்குமணன்.  சத்துருக்கனன்  என்னும்)  இரண்டு
மைந்தர்களையும்;  இவ்  இருவர்க்கு  -  (கோசலை. கைகேயி ஆகிய)
இரண்டு    மனைவியர்க்கும்;   இளையாளும்   -   இளையவளாகிய
சுமித்திரையும்; ஈன்று எடுத்தாள் - பெற்றெடுத்தாள்.

இலக்குவன்   பொன்னிறத்தவன்: சத்துருக்கனன்  வெண்ணிறத்தவன்;
இருவரும்  வில்  ஏந்தும்  வீரர். ஆதலால் அவர்க்கு  முறையே  மேரு
மலையும். கைலாய மலையும் உவமையாகக் கூறப்பெற்றன.          22