குலமுறை கிளத்து படலம் - 744
புதல்வரின் வேத முதலிய கலைப்பயிற்சி
744.
‘திறையோடும் அரசு இறைஞ்சும்
செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான்
புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!
உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை
வளர்த்தானும் வசிட்டன்காண்.
உறை ஓடும்- (பகைவரை வென்று) உறையில் அடங்கும்; நெடு
வேலாய் - நீண்ட வேலினை உடையவனே!; திறையோடும் - (இம்
மைந்தர்களுக்கு) திறைப் பொருள்கள் கொண்டு வந்து; அரசு
இறைஞ்சும் - எல்லா அரசர்களும் வணங்கக் கூடிய; செறி கழல் கால்
- நெருங்கிய வீரக்கழல் பூண்ட அடிகளையுடைய; தசரதன் ஆம்- தச
ரத மன்னனாகிய; பொறையோடும் தொடர் - பொறுமைப்
பண்புடனே பொருந்திய; மனத்தான் - மனத்தையுடையவனுக்கு;
புதல்வர் - மைந்தர்கள்; எனும் பெயரே காண் - என்று சொல்லுகின்ற
பெயர் ஒன்று மாத்திரமே; உப நயனம் விதி முடித்து - (ஆனால்)
வேத விதிப்படி செய்யத்தக்க உபநயனச் சடங்குகளைச் செய்வித்து;
மறை ஓதுவித்த - வேதங்களைப் பயிலுமாறு செய்து; இவரை
வளர்த்தானும் - இவர்களை வளர்த்தவன்; வசிட்டன் காண் - வசிட்ட
முனிவனே ஆவான்.
தசரதன் நால்வர்க்கும் தந்தை ஆயினும் இக் குமாரர்களின்
நன்மையை நாடிச் சகல கலைகளி்லும் வல்லவராகுமாறு
வளர்த்தமையால் வசிட்டனே உண்மைத் தந்தையெனத் தக்கான்
என்றார். 24
