குலமுறை கிளத்து படலம் - 746
இராமன் தாடகைமேல் எய்த அம்பின் சிறப்பு
746.
‘அலை உருவக் கடல் உருவத்து
ஆண்தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை
நீ உருவ நோக்கு ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண்
தாடகைதன் உரம் உருவி.
மலை உருவி. மரம் உருவி.
மண் உருவிற்று. ஒரு வாளி!
ஐயா - மன்னவனே!; அலை உருவம் - அலைகளின் வடிவமாகக்
காட்சியளிக்கின்ற; கடல் உருவத்து - கடல்போன்ற கரிய
திருமேனியுடைய; ஆண் தகைதன் - ஆண்மைத் தன்மையுள்ள இந்த
இராமனது; நீண்டு உயர்ந்த - நெடிதாக உயர்ந்துள்ள; நிலை
உருவப்புயம் - நிலையான அழகுடைய தோள்களின்; வலியை -
ஆற்றலை; நீ உருவ நோக்கு - நீ உற்றுப் பார்ப்பாயாக!; ஒருவாளி-
(இராமனது தோள் வலியால் எய்யப்பட்ட) அம்பு ஒன்றுதான்; உலை
உருவம் - உலைக் களத்திலுள்ள சிவந்த; கனல் உமிழ் கண் -
நெருப்பைக் கக்குகின்ற கண்களையுடைய; தாடகை தன் -
தாடகையினது; உரன் உருவி - மார்பைத் துளைத்து; மலை உருவி -
(அடுத்து நின்ற);மலைகளையும் துளைத்து; மலை உருவி - பல
மரங்களையும் துளைத்து; மண் உருவிற்று - (எதிரே வேறு பொருள்
இல்லாமையால்) நிலத்தையும் துளைத்துச் சென்றது.
‘இராமனைச் சிறுவன் என்று கருதாதே’ இவனது ஓர் அம்பு செய்த
செயலால் இவனது வீரம் எத்தகையது என்று ஆராய்ந்து பார்’
என்கிறான் முனிவன். அணி - திரிபு என்னும் சொல்லணி. பல
பொருள்களையும் துளைக்குமாறு அம்பு எய்யும் வில் திறம் ‘வல்வில்’
என்ற அடையால் புலப்படும். 26
