குலமுறை கிளத்து படலம் - 748

bookmark

இராமன் படைக்கலங்களின் சிறப்பு

இராமனது வில்லாற்றல்
 
748.    

‘ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
   அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
   கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
   படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
   இவற்கு ஏவல் செய்குனவால்.
   
ஐயா - அரசே!; அயற்கேயும் அறிவு அரிய - பிரமனாலும் அறிய
முடியாத   இராமனின்   பெருமைகளை;   ஆய்ந்து   ஏற உணர் -
ஆராய்ந்து  முழுவதும்  உணர்க;  உலகு  அனைத்தும் - உலகங்கள்
எல்லாவற்றையும்;  கடலோடும் -  கடல்களுடனும்;  மலையோடும் -
மலைகளுடனும்; காய்ந்து - எரிந்து; தீய்ந்து ஏற - கரிந்து போகும்படி;
சுடுகிற்கும்  படைக்கலங்கள்  - எரிக்கவல்ல  படைக்கருவிகள்; செய்
தவத்தால்  - செய்த தவப் பயனால்; ஈந்தேனும் - பெற்றுக் கொடுத்த
நானும்; மனம் உட்க - நெஞ்சு நடுங்குமாறு; இவற்கு ஏவல் செய்குன
- இந்த இராமனுக்கு குற்றேவல் செய்து நிற்கின்றன.  

‘ஈந்தேனும்     மனம் உட்க’  என்றது தன்னிடத்திலும் இராமனிடம்
ஆயுதங்கள்  மிக்க அன்புபூண்டு பணி  செய்கின்றன’  என்பதாம் ஆல்.
ஏ - அசைகள்.                                             28