சண்முக. செல்வகணபதி

bookmark

வாழ்க்கைக் குறிப்பு:

முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் மரபு வழியாகப் பெரும் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது தொடக்கக் கல்வியைத் திருவீழிமிழலையிலும், புகுமுக வகுப்பைக் குடந்தை அரசு கல்லூரியிலும், பி.ஓ.எல்இ முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்று தமிழ்ப்புலமையை வளர்த்துக் கொண்டவர்.

அவர் செய்த பணிகள்:

டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் நாடகங்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் 1987 இல் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 இல் ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்- கார்ல் சாண்ட்பர்க்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
05.12.1974 இல் திருச்சிராப்பள்ளி - திருவெறும்பூர் நாவலர் நெடுஞ்செழியன் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி 29 ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி, திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வர் பொறுப்பேற்றுப் பணி நிறைவு பெற்றவர்.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள்( 2007-2009) பணியாற்றித் தமிழ் நாட்டிய ஆசிரியர்களின் இந்தியப் பண்பாட்டுப் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வேடு வழங்கிய பெருமைக்குரியவர். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் இயலிசை நாடக மன்றத் திட்டத்தின் சார்பில் பத்துப்பாட்டில் இசைக்குறிப்புகள் என்ற ஆய்வேட்டை உருவாக்கி வழங்கியவர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் தகைஞராக இருந்து, சிலப்பதிகாரம் வழி அறியலாகும் ஆடல் அரங்கேற்ற நுட்பங்கள் என்ற தலைப்பில் ஆய்வேட்டை ஒப்படைத்துள்ளார் (2011, நவம்பர்).
பேராசிரியர், சண்முக. செல்வகணபதி அவர்கள் பல்வேறு கல்விநிறுவனங்களின் அழைப்பின் பேரில் சிறப்புரைகள், சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். உலக அளவிலான கருத்தரங்குகள் பதினைந்திலும், தேசியக் கருத்தரங்குகள் இருபத்தெட்டிலும், இதரக் கருத்தரங்குகள் எழுபத்தியிரண்டிலுமாகக் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியுள்ளார். இதுவரை 85 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணா மிர்த சாகரம் நூலினை இசைச்சித்திரமாக 15 பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியுள்ளார்(2009 சூன் முதல் 2009 ஆகத்து முடிய). இதுவரை 650 மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளார்.

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருப்புகழ்ப் பொழிவுகளும்(90 பொழிவுகள்), திருவீழிமிழலை ஆலயத்தில் திருமுறைப்பொழிவுகளும்(110) திருத்தவத்துறை ப.சு. நற்பணி மன்றத்தின் சார்பில் திருப்புகழ் இசைவிளக்கமும்(64 பொழிவுகள்), திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கில் இசைத்தமிழ் அறிஞர் தொடர்ப்பொழிவும் நிகழ்த்தியுள்ளார். தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் இசைத்தமிழ் அறிஞர் என்ற தலைப்பில்(38) பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

பேராசிரியர் சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்ப்பணியையும் இசைப்பணியையும் போற்றிய பல்வேறு இலக்கிய அமைப்புகள் செந்தமிழ் அரசு, விரிவுரை வித்தகச் செம்மல், முத்தமிழ் நிறைஞர், தமிழிசைச்செம்மல், செந்தமிழ் ஞாயிறு, திருப்புகழ்த் தமிழாகரர், உயர்கல்விச்செம்மல், இயலிசை நாட்டிய முத்தமிழ் வித்தகர், செந்தமிழ்ச்செம்மல், தமிழ்ச்சுடர், தமிழ் மாமணி, முத்தமிழ்ச்செம்மல், குறள் நெறிச் செம்மல், பண்ணாய்வுப்பெட்டகம், தொல்காப்பியர் விருது, பெரும்பாண நம்பி( பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு தமிழிசை விழாக்குழு) உள்ளிட்ட விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன.



முனைவர் அவர்களின் சில நூல்கள்:

 

  • ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கணம்

  • மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்

  • கல்வி உளவியல் மனநலமும் மனநல வியலும்

  • தனியாள் ஆய்வு

  • வரலாற்று மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்

  • தமிழ் மொழியியல் மைச்சுருள் அச்சு

  • தமிழிசை ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி அருணாசலக்கவிராயர்

  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

  • மொழிபெயர்ப்பியல்

  • பாரதிதாசன் கார்ல் சாண்ட்பர்க்கு ஓர் ஒப்பியல் ஆய்வு

  • ஒப்பிலக்கிய வரம்பும் செயல்பாடும்

  • திருவீழிமிழலை திருத்தலம்

  • நன்னூல் தெளிவுரை

  • சீர்காழி மூவர்