சதாவரி
தாவர இயல் பெயர்: Asparagus racemosus
இதன் மறு பெயர்கள்: சதாவேரி, நீர்வாளி, நீர்விட்டான், வரிவரி, சதாமூலம், தண்ணீர் விட்டான், நாராயண முலி, சதாவேலி, சதமுலை,உதக மூலம், சீக்குவை, பறனை, பீருதந்தி
வளரும் இடங்கள்: இந்த மூலிகையை பொறுத்தவரையில் இது உலகம் முழுவதிலும் பயிரிடப்படுகிறது. அதிலும் இந்தியாவை பொறுத்தவரையில் அனைத்துப் பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது.
பயன் தரும் பகுதிகள்: தண்டுப் பகுதி, வேர், இலை, கிழங்கு ஆகிய அனைத்துமே பயன் தரும்.
பொதுவான தகவல்கள் : சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் (Asparagus racemosus) என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது ஒன்று அல்லது இரண்டு மீட்டர் வளரும் இது சரளைக்கல், கற்கள் கொண்ட மணலில், கடல் மட்டத்திலிருந்து 1,300–1,400 மீட்டர் சமவெளிகளில் வளரும். இது மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இது வடமொழியில் சதாவரி (Shatavari - A Woman's Best Friend) என்று அழைக்கப்படுகிறது. நம்மூரில் "தண்ணீர் விட்டான்" என்ற பெயரில் பல இடங்களில் அழைத்து வருகின்றனர். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
இது மகாசதாவரி, சிறு சதாவரி என்று இருவகைப் படுகிறது. இதில் சிறு சதாவரி மலத்தை வெளியேற்றும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இனிப்புச் சுவையையும், கசப்புச் சுவையையும் ஒருங்கே கொண்டு இருக்கும். மறுபுறம் மகாசதாவரி மூன்று நாடிகளையும் சமமாக்கி அதன் மூலம்
எண்ணற்ற நோய்களை சரி செய்யும். பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர் விட்டான் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப் பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து) எனப் பெயரிட்டுள்ளனர்.
மருத்துவப் பயன்கள்:
* சதாவரி அல்லது தண்ணீர் விட்டான் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப் படுத்துகிறது.
* சதாவரி அல்லது தண்ணீர் விட்டான் பெண்களுக்கு தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது.
* சதாவரி அல்லது தண்ணீர் விட்டான் ஆண், பெண் இருபாலருக்கும் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
* சதாவரி மலத்தை வெளியேற்ற வல்லது. ரத்தத்தை சுத்திகரித்து நல்ல தூக்கத்தை தரக் கூடியது.
* சதாவரி நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக உள்ளது. எனினும் இதன் பட்டை நச்சுத் தன்மை கொண்டது.
* சதாவரி குடல் வலி, வயிற்றுப் போக்கு, பசியின்மை போன்ற அனைத்தையும் போக்க வல்லது.
* சதாவரி வெள்ளை - வெட்டை தொந்தரவுகளை விலக்கும். இரத்த பித்தம், எலும்புருக்கி நோய், நாள் பட்ட காய்ச்சல் ஆகிய அனைத்துப் பிணிகளையும் குணமாக்கும்.
* ஹார்மோன் பிரச்சினைகளினால் பெண்களுக்கு உடல்பருமன், மாதவிலக்கில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது சதாவரி எனப்படும் தண்ணீர் விட்டான் செடி. இதனை உட்கொண்டால் பெண்களின் கருப்பையை பலமாக்குகிறது. கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்கின்றது.
* சதாவரி மூல ரோகத்திற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
* சதாவரி உடல் உல் உறுப்புகளின் புண்களை ஆற்றுகிறது. முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகும்.
* தண்ணீர் விட்டான் கிழங்கு ஆரோக்கிய பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
* சதாவரி - வாழ் மிளகு, தேன் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து பாலுணர்வை தூண்டும் வலுவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
* சதாவரி மூலிகையின் உதவியுடன் தயாரிக்கப்படும் தைலம் நரம்பு மண்டல நோய்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது. அத்துடன் எலும்புகள் சம்மந்தமான வலிகளையும் தீர்க்க உதவுகிறது.
* பசுமையான தண்ணீர்விட்டான் வேர்களை நீரில் நன்றாக அலசிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். சுத்தம் செய்த வேர்களை நீர்த்தன்மை போக வெயிலில் உலர்த்தி எடுத்து நன்கு இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டான் வேர்த் தூள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வரவேண்டும். இதனால், சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.
