மல்லிகை

மல்லிகை

bookmark

மல்லிகை

மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் இது பயன்படுகிறது. இது மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய பயன்படுகிறது. இம்மலர் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.

தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது, தடித்தது ஆகியனவாகும். இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை காட்டு மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி, இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.

ஜாஸ்மினம் என்று பண்டைய ஃபிரஞ்சு மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின் என, அதாவது "கடவுளின் பரிசு" எனப் பொருள்படுவதாகவும் அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள், கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம்.