மிதிலைக் காட்சிப் படலம் - 619
இராமனை நினைந்து சீதை உருகுதல்
619.
‘இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.
சந்திர வதனமும். தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே. அல;
முந்தி. என் உயிரை. அம் முறுவல் உண்டதே!
இந்திர நீலம் ஒத்து- இந்திர நீலம் என்ற மணிக்கு ஒப்பாக;
இருண்ட குஞ்சியும் - கறுத்த மயிர்முடியும்; சந்திர வதனமும்
- முழுநிலவு போன்ற முகமும்; தாழ்ந்த கைகளும் - (முழங்கால்
வரை) தொங்கும் கைகளும்; சுந்தர மணிவரை - அழகிய
நீலமணிமலைகள் போன்ற - தோளுமே - தோள்களும் என்னும்
இவையே; அல - அல்ல (அவ்வாறாயின் பின் யாது என்றால்);
அம் முறுவல் - அந்தப் புன்னகைதான்; முந்தி - (இவை
எல்லாவற்றுக்கும்) முற்பட்டு; என் உயிரை உண்டது - எனது
உயிரைக் கவர்ந்தது.
முறுவர்: மகிழ்ச்சிக் குறிப்பு. இந்திர நீலம்: சிறந்த சாதி நீல மணி.
என் காதலனுடைய குஞ்சி முதலியன என் உயிரை உண்டன
என்றாலும் முற்பட்டு உயிரை உண்டது அவனது புன்முறுவலே என்று
வருந்திக் கூறுகிறாள் சீதை. 57
