மிதிலைக் காட்சிப் படலம் - 626

bookmark

626.

மீது அறை பறவை ஆம் பறையும். கீழ் விளி
ஓத மென் சிலம்பொடும். உதிரச் செக்கரும்.
பாதக இருள் செய் கஞ்சுகமும். பற்றலால்.
சாதகர் என்னவும் தகைத்து - அம் மாலையே.
 
மீது   அறை- மேலே (வானத்திலே) ஒலிக்கின்ற;  பறவையாம் -
பறவைகளாகிய; பறையும் - பறை என்னும் வாத்தியத்தையும்; கீழ்விளி
- கீழே   (நிலத்திலே)   ஒலிக்கின்ற;   ஓதம்   என் -   கடலாகிய;
சிலம்பொடும்  -   காற்சிலம்பையும்;  செக்கர் -   செவ்வானமாகிய;
உதிரமும்  -  இரத்தக்  குறிகளையும்;    பாதக   இருள்செய்  -
(சீதைபோலக்     காமவேதனை    கொண்டவர்க்குத்)    துன்பத்தை
விளைக்கும் இருளாகிய்; கஞ்சுகமும் - கருஞ்சட்டையையும்; பற்றலால்
-  கொண்டிருப்பதனால்; அம் மாலை -  அந்த  மாலைப்  பொழுது;
சாதகர் என்னவும்  - சாதகர் என்ற பெயரிய ஒருவகைக் கடுமையான
விரதத்தராம்  தேவி   உபாசகர்  என்று  சொல்வதற்கும்; தகைத்து -
தகுதியுடையது.  

பறை:     தமருகம்   முதலிய  வாத்தியம்.  சாதகர்: கடுநோன்பும்
சூளுறவும்    கொண்ட   தேவி   உபாசகர்.   மாலைக்   காலமானது
பறவையொலியையே    பறை    ஒலியாகவும்.    கடல்   ஒலியையே
காற்சிலம்பொலியாகவும்   கொண்டு   இருளாகிய   கருஞ்சட்டையைத்
தரித்துச்  செக்கராகிய  உதிரத்தை ஏந்தி உபாசகர் போன்று  இருந்தது.
அணி: தற்குறிப்பேற்றவணி.                                 63