மிதிலைக் காட்சிப் படலம் - 629
மாலைப்பொழுது கண்டிரங்கல்
629.
‘மை வான் நிறத்து. மீன் எயிற்று.
வாடை உயிர்ப்பின். வளர்செக்கர்ப்
பை வாய் அந்திப் பட அரவே!
என்னை வளைத்துப் பகைத்தியால்
எய்வான் ஒருவன் கை ஓயான்;
உயிரும் ஒன்றே; இனி இல்லை;
உய்வான் உற. இப் பழி பூண.
உன்னோடு எனக்குப் பகை உண்டா?
வான் - ஆகாயத்திலே பரவிய; மைநிறத்து - கரு நிறத்தையும்;
மீன் எயிற்று - நட்சத்திரங்களாகிய நச்சுப் பற்களையும்; வாடை
உயிர்ப்பின் - வாடைக் காற்றாகிய பெருமூச்சையும்; வளர் செக்கர் -
பரவிய செவ்வானமாகிய; பை வாய் - நச்சுப்பை கொண்ட வாயையும்
உடைய; அந்தி - அந்திப் பொழுதாகிய; படம் அரவே -
படத்தையுடைய நாகமே! (நீ) எக்காரணத்தால்; என்னை வளைத்து
- என்னை வளைத்துப்பற்றி; பகைத்தி - என்னோடு பகைத்து
(என்னை) வருத்துகிறாய்?; எய்வான் ஒருவன் - (என்மேல்)
அம்புகளை எய்பவனாகிய மன்மதன்; கை ஓயான் - (எய்யும்
தொழிலில்) கை சிறிதும் தளர்கிறவன் அல்லன்; உயிரும் ஒன்றே
- (எனக்கு உள்ளதோ) ஓர் உயிர்தான்; இனி இல்லை - (அதனை
அவன் கவர்ந்துவிட்டால்) உன்னால் கவர என்னிடம் வேறு உயிர்
இல்லை; உய்வான் உற - (அம் மன்மதனிடமிருந்து) தப்பிப் பிழைக்க
நான் முயன்று வருங்காலத்து; இப் பழி பூண - இப் பெண்
பழியை ஏற்பதற்கு; என்னோடு உனக்கு - என்னிடம் உனக்கு; பகை
உண்டோ - என்ன பகை உள்ளதோ?
உருவக அணி: அச்சம் தருவதால் இருளைக் கருநிறமாகவும். பள
பளத்தலால் வானத்து மீனைப் பல்லாகவும். அனல் வீசுவதால்
வாடையைப் பெருமூச்சாவும். தன்னை விழுங்குவது போன்று
இருத்தலால் செவ்வானத்தை வாயாகவும். சொல்ல வருதலால்
மாலையைப் பாம்பாகவும் உருவகப்படுத்தினாள். காற்று: வடக்கிலிருந்து
வீசும் காற்று. 66
