மிதிலைக் காட்சிப் படலம் - 632

bookmark

சேடியர் உதவிபுரிதல்

தோழியர் நெய்விளக்கு அகற்றி மணிவிளக்கு அமைத்தல்
 
632.

ஆண்டு. அங்கு அனையாள். இனைய நினைந்து
   அழுங்கு ஏல்வை. அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெருங்கோயில்.
   சீத மணியின் வேதிகைவாய்.
‘நீண்ட சோதி நெய் விளக்கம்
   வெய்ய’ என்று. அங்கு அவை நீக்கி.
தூண்டல் செய்யா மணி விளக்கின்
   சுடரால். இரவைப் பகல் செய்தார்.
 
ஆண்டு     -   அந்த இடத்திலே;  அனையாள் - அச்  சீதை;
இனைய நினைந்து - இவற்றையும் இவை போன்றவற்றையும் எண்ணி்;
அங்கு - அவ்வாறு;    அழுங்கும்  ஏல்வை -    வருந்தும் போது
(தோழியர்; அகல்   வானம்  -   அகன்ற  வானத்தையும்;  தீண்ட
நிமிர்ந்த - தொடும்படி  உயர்ந்துள்ள;  பெருங்கோயில்  -  கன்னி
மாடத்தில்;  சீத மணியின் - குளிர்ந்த   சந்திர   காந்த   மணியால்
 இழைத்த;   வேதிகை  வாய்  - மேடையில்;  நீண்ட  சோதி  -
மிக்க   ஒளிதரும்;  நெய்  விளக்கம் -  நெய்யினாலே  ஏற்றப்படும்
விளக்குகள்; வெய்ய என்று - வெப்பம் தருவன என்று கருதி்; அங்கு
அவை   நீக்கி - அவ்விடத்தில்  அவற்றை நீக்கி  விட்டு்; தூண்டல்
செய்யா - (யாரும்) தூண்ட வேண்டாத; மணி விளக்கின் - இரத்தின
விளக்குகளின்; சுடரால் - ஒளியால்; இரவைப் பகல்   செய்தார்  -
இரவுப்பொழுதைப்  பகல் போல  வெளிச்சம் உண்டாகும்படி செய்தார்கள்.  

சீதை     வருந்தும்   போது  நெய்  விளக்கும்  அச்  சீதையின்
வெப்பத்தை   மிகுதியாக்கும்   என்று   தோழியர்  கருதி  அவற்றை
நீக்கிவிட்டு மணி விளக்கால் அங்கு வெளிச்சம் உண்டாக்கினர்.  

சீத மணி - சந்திரகாந்தக்கல் ‘ஆனாதே இருள் பருகும்  அருமணி’
- (சீவக.169)                                              69