மிதிலைக் காட்சிப் படலம் - 634

bookmark

634.

வண்டு ஆய் அயன். நான் மறை பாட.
   மலர்ந்தது ஒரு தாமரைப்போது.
பண்டு ஆலிலையின்மிசைக் கிடந்து.
   பாரும் நீரும். பசித்தான் போல்.
உண்டான் உந்திக் கடல் பூத்தது;
   ஓதக் கடலும். தான் வேறு ஓர்
வெண் தாமரையின் மலர் பூத்தது.
   ஒத்தது - ஆழி வெண் திங்கள்.
 
பண்டு  -  முற்காலத்திலே; ஆல்  இலையின் மிசை  -   ஆல்
இலையின் மேலே; கிடந்து - பள்ளி கொண்டு; பசித்தான்  போல் -
பசி உடையவன்போல;   பாரும்  நீரும்  - உலகங்களையும்  கடல்
களையும்; உண்டான் -  உண்டவனான திருமாலின்; உந்திக் கடல் -
நாபியாகிய கடலானது;  அயன் - பிரமன்; வண்டு ஆய் -  வண்டை
யொத்து  (மேலே   தங்கியிருந்து);     நான்மறை  பாட -  நான்கு
வேதங்களும் பாட; மலர்ந்தது - பூத்துள்ள; ஒரு தாமரைப் போது -
ஒரு  செந்தாமரை மலரை; பூத்தது - உண்டாக்கியது; ஓதக் கடலும் -
(அதை நோக்கி இனி) அலைகளையுடைய கடலும்; தான் வேறு ஓர் -
தான் வேறொரு; வெண் தாமரையின் மலர் - வெண்டாமரை மலரை;
பூத்தது ஒத்தது -  பூத்ததை  ஒத்திருந்தது;  ஆழி வெண்திங்கள் -
கடலிலிருந்து தோன்றிய சந்திரன்.   

அணி:     தற்குறிப்பேற்றவணி. ‘ பசித்தான்  போல்’-  கடவுளின்
எண்குணங்களுள்  பசியின்மையும் ஒன்று. ஆயினும் அதை  மறுப்பது
போன்று  பசித்தான்  எனக் கூறினார். ஒப்பு நோக்குக: ‘உறுபசி ஒன்று
இன்றியே  உலகு  அடைய உண்டனையே’ (சிலம்பு: ஆய்ச்சி. குரவை)
உண்ணும்  சோறு  உலகமாகவும்.  பருகும் நீர் கடலாகவும். வண்டின்
ரீங்காரம்  நான்  முகனது  வேதப்  பாடலாகவும் கொள்ள வேண்டும்.
திருமாலின் உந்திக் கடல் செந்தாமரை பூத்ததுபோல இக் கடல் வெண்
தாமரை பூத்தது. கலை நிறைந்த சந்திரன் இதழ் விரிந்த வெண்தாமரை
மலரை ஒக்கும்.                                           71