மீனாட்சிசுந்தரம் பிள்ளை
வாழ்க்கை வரலாறு இவர் திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815இல் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். சென்னை சென்று சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமைப் பெற்றார். காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். சிற்றிலக்கியக் காலம் என்று கூறப்பட்ட இவரது காலத்தில் திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார். மயிலாடுதுறையில் பலகாலம் தங்கி இவரது புலமையை அறிந்து நாடிவந்த பல மாணவர்களுக்கு பொருள் எதிர்பாராமல் தமிழ் கற்பித்தார். பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் இவரிடம் இல்லை. தன்னிடம் கல்வி பயில வரும் ஏழை மாணவர்களைச் சொந்த பிள்ளைகள் போலக் கருதி உணவும், இடமும் அளித்து குருகுல முறையில் பாரபட்சமின்றி கல்வி புகட்டினார். கவிதைகள் பாடி சன்மானமாகப் பெற்ற செல்வத்தைக்கொண்டே இவர் தனக்கும் தன் மாணாக்கர்களுக்கும் செலவழித்தார். இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் ஆகியோர் ஆவர். தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1876-இல் தமது 61-வது வயதில் மறைந்தார்.
