ரா.நாராயண ஐயங்கார்

bookmark

இளம் பருவம்::

திருச்சி நகரத்தில் சகோதரர்களாகக் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டவர்களில் ரா.நாராயண ஐயங்காரும் அவரது தம்பி ரா.கிருஷ்ணசாமியும் முக்கியமானவர்கள். ரா.நாராயண ஐயங்காரின் தாயின் தியாகம் மிகவும் சிறப்பானது. மகாத்மாவிடம் பக்தியுடைய இந்த முதிய அம்மையார், காந்தி சுடப்பட்டு இறந்தார் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மயங்கி விழுந்து உயிர் துறந்தார்.

சட்டப் படிப்பை முடித்துக் கொண்டு திருச்சியில் வக்கீல் தொழிலை மேற் கொள்ள இவர் எண்ணியிருந்த நேரம். வருஷம் 1919. அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கியிருந்த ‘ஹோம்ரூல்’ இயக்கம் இவரைத் தேச சேவையில் ஈடுபடவைத்தது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து நாட்டுப் பணியில் இவர் ஈடுபடலானார். அப்போதிருந்த திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினரானார். அதன் செயலாளராகவும் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு டி.வி.சுவாமிநாத சாஸ்திரி தலைவராக இருந்தார். பழம்பெரும் புரட்சி வீரர் வ.வெ.சு.ஐயரும் திருச்சி ஜில்லா காங்கிரசில் அங்கம் வகித்து வந்தார்.

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் சதாசிவமும் அப்போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள். காந்திஜி விடுத்த அறைகூவலுக்கேற்ப இவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு காங்கிரஸ் இயக்கத்தில் பணிசெய்யத் தொடங்கினர்.ஒத்துழையாமை இயக்கத்துக்காக இவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். கல்கி அவர்கள் பாரதியாரின் பாடல்களைப் பாடுவார்.



இவரின் கடமை உணர்ச்சி:

1921இல் திருச்சியில் பிரதாப நாராயண வாஜ்பாய் என்பவர் ஹிந்தி பிரச்சாரத்துக்காக மகாத்மா காந்தியால் அனுப்பப்பட்டு அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் இவர் ஹிந்தி வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு தந்தி அவர் பெயருக்கு வந்தது. அதை வாங்கிப் படித்துவிட்டுத் தன் பையில் வைத்துக்கொண்டு பாடங்களைத் தொடர்ந்து நடத்தினார். வகுப்பு முடிந்ததும் அந்தத் தந்தியில் வந்த செய்தி என்ன என்று விசாரித்ததில் வடநாட்டில் அவரது மனைவி இறந்த செய்தி அது என்று கூறினார். தன் கடமையில் சொந்த பாசங்கள் குறுக்கிடாமல் உறுதியோடு செயல்பட்ட அவரைப் பலரும் போற்றினர். இந்த வாஜ்பாய் திருச்சி நகரத்தில் டவுன்ஹால் மைதானத்தில் பல சொற்பொழிவுகளைச் செய்திருக்கிறார். டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, வக்கீல் ஹாலாஸ்யம் போன்றவர்கள் இவர் பேச்சை மொழிபெயர்த்திருக்கின்றனர்.



சுதந்திர போராட்டத்தில் இவரின் பங்கு:

ரா.நாராயண ஐயங்கார் கதர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். க.சந்தானம் அவர்கள் கதர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். சங்கிலியாப் பிள்ளை என்பவர் கதர் கடை வைத்து வியாபாரம் தொடங்கினார். பெரிய கடைத்தெருவில் பீமா லஞ்ச் ஹோம் எதிரில் இது இருந்தது. 1926-27இல் காந்திஜி திருச்சி வந்தார். டாக்டர் ராஜன் வீட்டில் தங்கினார். அப்போது நாராயண ஐயங்கார் காந்திஜிக்குத் தேவையான சேவைகளைச் செய்துகொண்டு ராஜன் வீட்டிலேயே தங்கி இருந்தார். வாயில் காப்பானாகவும் இவர் செயல்பட்டதுண்டு.

1930இல் ராஜாஜி தொடங்கிய வேதாரண்யம் உப்பு யாத்திரையில் இவரும் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டு சென்றார். வழியில் கல்லணை அருகில் அரசாங்கத்தின் கெடுபிடிக்குப் பயந்து இவர்களுக்கு ஒருவரும் உதவி செய்யவோ, உணவளிக்கவோ பயந்த நிலையில் ஒருவர் நாராயண ஐயங்காரிடம் வந்து காவிரியில் ஓரிடத்தைக் காட்டிவிட்டுப் போய்விட்டார். இவர் போய் அந்த இடத்தில் மணலைத் தோண்டிப் பார்க்க அங்கு ஒரு கட்டு புடலங்காய், ஒரு தார் வாழைக்காய், அரிசி மூட்டைகள், பானையில் தயிர் வைத்து மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன. அத்தனை கெடுபிடியிலும் உதவி செய்ய உத்தமர்கள் இருந்ததை எண்ணி நாராயண ஐயங்கார் மகிழ்ச்சியடைந்தார்.

இவர் திருச்சி இரட்டைமால் தெருவில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு தொண்டர்கள் முகாம் நடத்தினார். அதில் ராஜாஜியின் மகன் நரசிம்மன், சங்கு சுப்பிரமணியன் முதலானோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஐயங்காருக்கு 16மாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. காங்கிரஸ் கமிட்டிக்கு நீலாம்பாள் என்பவர் வாடகைக்கு விட்டிருந்தார். இவர் மீது வழக்கு வந்துவிடாமல் இருக்க வக்கீல் என்ற முறையில் நாராயண ஐயங்கார், தன் வீட்டை வாடகைக்குத்தான் விட்டேன் மற்றபடி எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கோர்ட்டில் சொல்லிவிடு என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் கோர்ட்டில் காங்கிரஸ் தொண்டர் முகாமுக்கு என்று தான் நான் கொடுத்தேன், வாடகைக்காக அல்ல என்று சொன்னார், அதனால் தண்டிக்கவும் பட்டார்.



சிறை வாழ்க்கை:

வக்கீலான இவரை சேலம் சிறையில் கல்லுடைக்கச் சொன்னார்கள். அவரும் அந்தத் தொழிலை மிகச் சிறப்பாகச் செய்து வந்தார். சிறையில் இவருக்கு ‘சி’ வகுப்பு கொடுக்கப்பட்டது. திருச்சி வக்கீல்கள் ஒரு போராட்டத்தை நடத்தில் இவருக்கு ‘பி’ வகுப்பு வாங்கிக் கொடுத்தார்கள். சிறை வாழ்க்கை இவருக்கு உயிருக்கே உலை வைக்கும்படியான உடல் பாதிப்பை ஏற்படுத்தியது. வெளியே வந்தும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்படமுடியவில்லை. இவர் சிறையிலிருந்து வெளிவந்த போது நடந்த வக்கீல்கள் பாராட்டு விழாவில் இவரது தாயார் தன் கையால் நூல் நூற்று நெய்த வேட்டி துண்டுகளை இவருக்குப் பரிசாக அளித்தார்.



பத்திரிக்கை வெளியீடு:

1931ம் வருஷம் மதுரையில் காங்கிரஸ் மாகாண மகாநாடு நடந்தது. தீர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நாராயண ஐயங்கார்தான் செயலாளர். 1934இல் சங்கு சுப்பிரமணியம் இவரைச் சென்னைக்கு வந்து ‘சங்கு’ பத்திரிகையை நடத்த அழைத்தார். அங்கு இவர் "காங்கிரஸ்மேன்" எனும் வாரம் மும்முறை பத்திரிகையொன்றையும் வெளியிட்டார். "தன்பின் "ஜெயபாரதி" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். பிறகு "இந்துஸ்தான்" எனும் வார இதழில் 11 ஆண்டுகள் பணியாற்றினார். அதோடு ‘தினமணி’, ‘சுதேசமித்திரன்" பத்திரிகைகளிலும் சுயேச்சையாக எழுதி வந்தார். தனது ஓய்வு நாட்களைத் திருச்சியில் கழித்தபின் தனது முதிய வயதில் காலமானார் ரா.நாராயண ஐயங்கார்.