வரைக்காட்சிப் படலம் - 914
அரசர்கள் படமாடஞ் சேர்தல்
படமாடங்களில் வதிதல்
914.
தாள் உயர் தடக் கிரி இழிந்து தரை சேரும்
கோள் அரி என. கரிகள் கொற்றவர் இழிந்தார்;
பாளை விரி ஒத்து உலவு சாமரை படப் போய்.
வாள் எழ நிரைத்த படமாடம்அவை புக்கார்.
கொற்றவர் - (யானையை ஊர்தியாகக் கொண்ட) அரச குமாரர்கள்;
தாள் உயர் தடகிரி இழிந்து - தாழ்வரை உயர்ந்துள்ள பெரிய
மலையிலிருந்து இறங்கி; தரை சேரும் - நிலத்தை அடையும்; கோள்
அரியென - வலிய சிங்கத்தைப் போல; கரிகள் இழிந்தார் -
யானைகளிலிருந்து கீழே இறங்கியவராய்; பாளை விரி ஒத்து உலவு -
விரிந்த பாளையை ஒத்து (தம் இரு புறங்களிலும்) அசைகின்ற;
சாமரை படப் போய் - சாமரைகள் வீசும்படி சென்று; வாள் எழ
நிரைத்த - ஒளி எழும்படி ஒழுங்காக அமைத்த; படமாடம் அவை -
கூடாரங்களில்; புக்கார் - புகுந்தார்கள்.
அரச மைந்தர்கள் யானைகளிலிருந்து இறங்கி. இருபக்கமும் வெண்
சாமரைகள் வீசப் பெறக் கூடாரங்களில் புகுந்தனர் என்பது.
யானைகளிலிருந்து இறங்கிய அரச குமாரர்க்கு மலையிலிருந்து
இறங்கிய சிங்கம் உவமையாம். மலையடிவாரத்தில் அமைந்த குகை
கூடாரத்திற்கு உவமையானது. 17
